பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பொன்னன் கதை!


பொன்னன் ஒருநாள் தெருவழியே
போய்க்கொண் டிருந்தான்; அவன்முன்னே
நன்னன் வந்தான்; அவன் இவனை
நாடகம் பார்க்கக் கூப்பிட்டான்!

இருவரும் நாடகம் பார்த்தார்கள்!
இரவில் வீடு திரும்புகையில்
ஒருவன் வந்தான், "பொன்னா! உன்
உறவினர் ஒருவர் இறந்தாராம்;

செய்தியைக் கேட்டே உன்பெற்றோர்
செங்கற் பட்டு சென்றுள்ளார்;
பொய்யிலை, உன்னை என்னோடு
புறப்பட் டங்கே வரச்சொன்னார்;

எடு எடு போவோம்" என்றழைத்தான்!
இவனைத் தெரியான் அவனெனினும்
விடுவிடு என்றே நன்னனையும்
வீட்டிற் கனுப்பிப் புறப்பட்டான்!

பெற்றோர் பொன்னனைக் காணாமல்
பெரிதும் வருந்தினர்; அங்கங்கே
உற்றார் உறவினர் ஊரிலெல்லாம்
ஓடினர்; தேடினர்; பயனில்லை!

நாட்கள் மூன்று நடந்தனவே!
நன்னனும் செய்தியை அவர்க்குரைத்தான்!
ஆட்கள் பலரும் திசைக்கொருவர்
அவனைத் தேடி அலைந்தனரே!

இப்படி யிருக்கையில் ஒருநாளில்
எங்கிருந் தோஒரு மடல்வரவே
அப்பா அம்மா பிரித்தார்கள்!
அதிலே பொன்னன் வரைந்திருந்தான்!

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

53