பக்கம்:பாச்சோறு, குழந்தைப்பாடல்கள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



குழந்தை இலக்கியம் கழகக் காலத்திலும் உண்டு.

ஊழி ஊழியாய் வளரும் மாந்தக் குமுகாயத்தின் அடியூற்றாகக் கிளர்ந்தெழும் குழந்தை உணர்வுகள் என்றும் அழிந்து போகாமல் ஒவ்வொரு மாந்த உள்ளத்தின் அடித்தளத்திலும் படர்ந்து கிடக்கின்றன. அவை அவனைச் செழுசெழுப்பாக்கி வளரச் செய்கின்றன; வாழச் செய்கின்றன; மகிழச் செய்கின்றன; மங்காமல் என்றென்றும் நிலைநிற்கச் செய்கின்றன.

குழந்தை மனந்தான் கொழுமை மனம்! மாந்தத்திற்கு வேண்டிய கரு மனம்!

ஆனால் உலக வினைவெப்பத்தில் அம்மனம் காய்ந்து, கருகி, உலர்ந்து, உதிர்ந்து விடுகின்றது!

அதை அப்பொழுதைக்கப்பொழுது உணர்வு நீருற்றி உலராமல் வைத்துக்கொள்ள இலக்கியங்கள் உதவுகின்றன. குழந்தை இலக்கியங்களோ, முளையையும் சாம்பிவிடாமல் இலையையும் கருகிவிடாமல் காத்து நிற்கப் பயன்படுபவை.

பள்ளிக்குப் பறக்காத குஞ்சுகளுக்கும், பள்ளிக்குப் பறந்து செல்லும் பறவைகளுக்கும் அவ்வப் பொழுது வடித்த பாடல்கள் இவை.

இக்கால், இவை, ‘பள்ளிப்பறவைகள்’ என்னும் பெயரால் முதல் தொகுப்பாக வெளியிடப் பெறுகின்றன.

இப்பெயர் வரிசையில் இரண்டாம் தொகுப்பும் பின்னர் வெளியிடப்பெறும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார்

5