பக்கம்:பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம் 1.pdf/13

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10

பாஞ்சாலங்குறிச்சி வீர சரித்திரம்

தோன்றிய இந்தச் சிங்கக்குட்டி எங்கும் இசை நாட்டும் என இளமையிலேயே சில உளவுகள் அறிய நின்றன. அந்நிலையினையுணர்ந்து இருமுது குரவரும் பெருமகிழ்ச்சியடைந்தனர். அக்குறுநில மன்னன் முப்பத்திரண்டு ஊர்களுக்குத் தலைவனாய் நிலவி இருந்தான். அங்கனம் இருந்து வருங்கால் கால வேற்றுமையால் மூன்று வருடங்களாக அங்கே சரியான மழை பெய்யவில்லை. அதனால் குடிகளெல்லாரும் மிடிவாய்ப்பட்டு நெடிது வருந்தினார்; சிலர் அயலிடம் புகுந்தனர்; பலர் படுதுயருழந்தனர்; அரசும் நிலை குலைந்தது; எங்கும் அவலமிகுந்தது; அரசன் மிகவும் கவலை கூர்ந்து கலங்கியிருந்தான்.

வடநாடு விட்டுத் தென்னாடு வந்தது

அவ்வமயம் அத்தேசம் முழுவதையும் ஆட்சி செய்துவந்த மகமதிய அரசன் இக்குறுநில மன்னனிடம் உரிமையோடு பெண்கொள்ள விழைந்தான். அவ்விழைவின் விளைவை அளவு செய்துவந்து, முடிவில் தன் கருத்தை மந்திரிகள் மூலம் இவனுக்கு அறிவித்தான். அதனைக் கேட்டவுடனே இவன் வாட்டமீக்கூர்ந்து வருக்தி அயர்ந்து மானம் அழிய நேர்ந்ததே என்று மறுகியுளைந்தான். நேரே அவனிடம் மறுத்துரைக்கவும் ஆற்றலின்றிக் கறுத்து நின்று, கருத்து நொந்து உறுவதை ஓர்ந்தான். மரபு நிலையழிய வாழ்வதினும், அரசு நிலையொழிய அயலகல்வதே நலமென உறுதி செய்து, உறவுமுறையாருடன் ஆராய்ந்து ஒருவரும் அறியாவகை இரவிடை எழுந்து பசு நிரைகளை மட்டும் பாதுகாத்துக்கொண்டு, மனைவியும் மக்களும் ஒக்கலும் பிறரும் உடன் தொடர்ந்துவர, நென்திசை நோக்கிக் கடந்து, ஆங்காங்குத் தங்கி, திங்கள் ஆறு கழிந்தபின் இத்தென்னாட்டையடைந்து *சாலிகுளம் என்னும் பறம்பில் வந்து வேலி வளைத்துக் கன்று காலிகளை நன்று பரிபாவித்து உற்றாரோடு உவந்து உறைந்திருந்தான். அவ் அல்லல் நிலையிலும்

  • இது மணியாச்சியிலிருந்து வடகிழக்கில் 10 மைல் தூரத்தில் உள்ளது. சாரலும், ஏரியும் சாரப்பெற்றது, நீர்வளம் உடையது.