பக்கம்:பாடகி.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை


இந்தக் கதை — வெளியில் எழுதத் தொடங்கி உள்நாட்டுப் பராமரிப்புச் சட்டத்தின் கீழ் (மிசா) நான் மதுரைச் சிறைச் சாலையில் இருந்த போது முடிக்கப் பெற்றது.

இந்தக் கதையின் கரு மிகவும் நுணுக்கமானது; ஆனால் உண்மையானது. எனக்குக் கிடைத்ததை வைத்துக் கொண்டு ஒரு நாவலை எழுதியிருக்கிறேன்.

நான் தொழிலுக்காக எழுதுபவனுமல்ல; வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதற்காக எழுதுபவனுமல்ல. எழுதுவதற்கு உரிய சினேப் பொருள்கள் கிடைத்தால் எனக்கு எழுதுவதற்கு உற்சாகம் பிறக்கும்; அவ்வளவுதான்!

நான் ஒரு பாவம் செய்த எழுத்தாளன்; ஏனென்றால் நான் ஒரு அரசியல் கட்சியில் இருக்கிறேன். அதனால் வாசகர் வட்டத்தின் ஒரு பகுதியினர் எங்கள் எழுத்துக்களை பார்க்காமலே புரட்டி விடுகிறார்கள். என்னைக் கேட்டால், அவர்களைத் தன்னம்பிக்கை அற்றவர்கள் என்றுதான் கூறுவேன். எங்கள் எழுத்துக்களைப் படித்தாலே அவர்கள் மனம் மாறிவிடும் என்று பயப்படுகிறவர்கள் எந்தக் கட்டத்திலும் எதிலும் நிலைக்க மாட்டார்கள் என்பது எனது அசைக்க முடியாத கருத்து.

நான் இந்தக் கதைக்கு ‘பாடகி’ என்று பெயர் வைத்திருக்கிறேன். வேண்டாதவனுக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு பெண் — தமிழ்ப் பெண், ஒரு இசையரசி தன் வாழ்க்கையை எவ்வளவு கஷ்டப்பட்டு மங்களமாக மாற்றிக் கொள்கிறாள் என்பதே இந்த நாவலின் சாரம்.

அன்பன்,
தென்னரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாடகி.pdf/5&oldid=1436028" இலிருந்து மீள்விக்கப்பட்டது