பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/1

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. வாழ்க இளம்பரிதி

(இன்னிசைக் கலிவெண்பா)

கடற்பரப்பில், உப்பங் கழிப்பரப்பில், தாழை
மடற்பரப்பில், நெய் தவ் மணற்பரப்பில், சாய்ந்த
முடப்புன்னைப் பைங்கிளையில், முண்டகப்பூங் காட்டில்
அடங்கி யிருந்தவிருள் அற்றொழியக் கீழ்க்கடல்மேல்
தங்கப் பரிதி தலை நிமிர்ந்தான்; வாழியவே
எங்குமே இன்பம்; இளம்பரிதி வாழியவே!
வானில், மலையில், மரக்காவில், பூம்புதரில்
போனவொளி, அட்டா! பொன் வெள்ளம்! பொன் வெள்ளம்!

ஆசை மனையாட்டி! அன்பே! இதைக்கேள்நீ!
மூசையிலே வைத்தெடுத்த பொன்னே முளைத்தகதிர்!
நீர்நிலங்கால் விண்ணை, நிலைத்த பொருளையெல்லாம்
ஆட்டிப் படைப்பதுவும், ஆக்கம் விளைப்பதுவும்,
வானம் முளைத்து வரும்பரிதி செய்கையடி!
நானிலத்தில், பொய்கை நறும்பூவில், வான்முகட்டில்,
ஊனில், உடலில், உயிர்ப்பில் ஒளிவீசி
வானாம் எழுச்சியினைச் செய்ததடி! வாழ்க்கதிர்!

இன்னுங்கேள்; பெண்ணரசி! ஏரி குளங்குட்டை
வடித்துவற்றி மெரக்கிளைகள் பட்டுவரச்
சுற்றிப் படர்ந்தகொடி தோப்பும் கலகலக்க,
நன்செய் பொலிவிழக்க, நல்லாறு நீர்வற்றப்,
புன்செய் இறைத்துழவன் நாளெல்லாம் போராட,
வானம் அனல்சொரியும்! மண்ணும் கனலெழுப்பும்!