பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101

புலவர் தமிழ்பாடப் புத்தம் புதிய
நிலைவகுத்து நீட்டியதார்? கும்மி-பலபாடச்,
சின்ன குழந்தை சிரித்துக் கவிபாடச்
சொன்ன நடை, நற்றமிழர் தூயநடை.- கன்னல்
தமிழ் நடையே! தக்கோர் இலக்கியத்திற் பூத்த
அமிழ்தச் சுவை நடையே ஆம்!

(இன்னிசைக் கலிவெண்பா)


சிந்துக்குத் தந்தை, செழுந்தமிழர் வாழ்வினிலே
வந்து பிறந்த மறுமலர்ச்சித் தந்தையாம்!

ஆற்றொழுக்குப் போலும்; அரிமா விழிபோலும்,
சேற்றுக்கே ஏற்ற செழுவூன்று கோல்போலும்

பாட்டென்றால் வாய்கோணிப் பல்லிளித்த நாட்களிலே
பாட்டுக் கொருபுலவன் பாரதியார் நாட்டில்

இனிய தமிழால், எளிய நடையால்
கனிபிழிந்த சாற்றினிலே கற்கண்டைச் செந்தேனைக்

கூட்டிக் குழம்பாக்கிக் கொடுத்துத் தமிழ்கூறும்
நாட்டினிலே தம்போன்ற நல்ல பரம்பரையை

உண்டாக்கி, நற்கவிதை உண்டாக்குந் தூய தமிழ்த்
தொண்டாற்ற நிற்குந் துணையெதுவாம்? பாரதியின்

உள்ளத்தை அள்ளும் உயர் கவிதைக் கற்பனையின்
தெள்ளு தமிழ்ச்சொல் புதிய நடை சீர்நடையே!

சுற்றி இருந்தோர்க்குத் தூய தமிழ்ப்பாட்டால்
“வெற்றியெட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே நீ”

என்றே இசைக்கும் இனிய கவிதையிலே
வென்றே வருமறவர் வீர நடைக்கேற்ற

தாளம் எழுப்புத் தமிழ்ச்சொல்லைப் பாரதியின்

மேள முரசெழுப்பும்; வீரப் புதிய நடை!