பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

அசைவில் தோன்றிய ஆர்பொலி நாட்செல
இசையும் கூத்தும் இயலுமாய் மாறிப்பின்
அசையும் சீர் தளை யாப்பென ஓங்கிமீ
மிசையில் செந்தமிழ் வெற்றியைக் கண்டதே!

மற்ற மொழிகள் வாய்வரா நாள்முதல்
உற்ற மொழியொன் றுண்டென மேலவர்
சொற்ற சொற்கள்நம் தீந்தமிழ்ச் சொற்களே!
மற்றிம் மண்ணிடை யாவர் மறுப்பரே!

முன்னர் மூத்தவள் தீந்தமிழ் இன்றியே
இன்னும் காட்டிடப் பேச எவருளார்?
பன்ன ரும்மொழிப் பாவலர் கூற்றிதே!
கன்னிச் செந்தமிழ் என்றுமே கன்னியாம்!

வாழு மண்ணிடம் நான்கிலொன் றாகுமாம்!
சூழு மக்களின் வாய்வரு சொல்லெலாம்
ஆழ நோக்கிடில் தீந்தமிழ் அன்னையின்
1காழ லாதுபின் காட்டுதல் கூடுமோ?

அன்ன செந்தமிழ்த் தாயின் அழகொளிர்
புன்னை பொன்சொரி பூக்கள்ம லிநெய்தல்
தென்னன் கேரளன் சீர்மிகு சோழனின்
பொன்னைத் தீந்தமிழ்ப் பூவையைப் போற்றுவோம்!

இலகு செந்தமிழ் இன்னிசை கூட்டிடும்
பலசு வைமிகு பாவின் மாகிய
கலிவி ருத்தமெனக் காரிகை பாடியே

தலைகுனிந்து நம் தாய்மொழி வாழ்த்துவாம்!