பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

171

தன் நடையைத் தனித்தமிழைத் தக்கபடி கற்றறிந்து
பின் தொடர்ந்து செயல்படுத்தப் பெற்றளித்தார் [பரம்பரையைப்
பழுத்த தமிழ்ப்புலமை பன்னூல் விளக்கங்கள்
எழுத்தசைசீர் தளையாப்பும் இன்னிசைப்பாப்பாவினமும்
கற்றறிந்த பின்னரே கவிபாட வேண்டுமென்பார்!
இற்றைக்குச் சொல்லடுக்கே எங்கும்பா வானதுவாம்!
காவாயைக் கால்வாய் எனக்கல்லா ரெல்லோரும்
பாவேந்தர் குற்றேவல் பாய்சுருட்டி என்றுரைப்பார்!
இன்றென்ன இலக்கணமா எடைஎன்ன விலையென்போர்
மன்றப் பெருங்கவிஞர்; வாய்வீச்சுப் பேச்சழகர்!
பட்டயமாம் பாவேந்தர் பாட்டைக் கையாளும் இன்
பட்டப் பகற்கொள்ளை பாட்டுலகில் கண்டோமே!
இன்றில்லை பாவேந்தர் என தாசான் கவியரசர்!
தென்றற் பொதிகைமலை! தீந்தமிழ்ப் பாற்கடலாம்!
செந்தமிழ்ப் பாவெங்கே செவியில் விழுகிறதோ
அங்கெல்லாம் பாவேந்தர் அடிச்சுவட்டைக் கண்டிட
எங்கெங்குத் தனித்தமிழின் எழுச்சி மிகுகிறதோ [லாம்;
அங்கெல்லாம் பாவேந்தர் விளைவின் அறுவடையே!
பாவேந்தர் பாட்டுலகில் மாணவர்கள் பல்லோர்கள்!
பாவேந்தர் பாட்டுணர்ந்த மாணவர்க்கா பஞ்சமிங்கே?
இவ்வரங்கில் பாடுகின்றோர் எல்லோரும் மாணவரே!
எவ்வரங்கும் பாடுகின்ற ஏகலைவர் பலருண்டாம்!
பாவேந்தர் மாணவர்க்குப் பாடிவைத்த பாடலெலாம்
நாவாலே நான்கூற நாளெல்லாம் போதாவே!
என்றாலும் ஒன்றிரண்டை அவர்பாட்டால் இயம்பிடுவேன்!

இன்றிருந்து கேட்பீர் இனிது!