பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

குஞ்சுக்குக் கக்கிக் கொடுப்பதை நாம் கண்டிருந்தோம்!
வஞ்சியே! அன்பால் மலையும் அசையுமடி!
கொட்டகையில் நம்மெருமை கன்றின் குரல் கேட்கக்
கட்டறுத்தே ஓடிவரும் காரணத்தைக் கண்டிருப்பாய்!
கீரையின் காம்பொத்த சின்ன விரல் நகத்தாற்
கூரை அருகினிலே குஞ்செல்லாம் சீய்த்திருக்க
வானத்தில் வட்டமிடும் வல்லூற்றைத் தாய்ப்பெட்டை
ஏன் துரத்தும்? குஞ்சை இறக்கைக்குள் ஏனடக்கும்?
தாயன்பு! தாயின் மடியிருந்து பால்குடிக்கும்
காயாம்பூ மேனிச் சிறுகுழவி தன்னிரண்டு
வள்ளிக் கிழங்கு மலரடியால் தாய்முகத்தைத்
தள்ளுவதும், தள்ளிச் சிரிப்பதுவும் அன்பேயாம்!
கோனாட்சி நீக்கிக் குடியாட்சி காண்பதற்கு
மான்விழியார், காளையர்கள் செங்குருதி சிந்தியதும்
பொன்னாட்டின் தாய்நாட்டின் தன்னாட்டின் மேலெழுந்த
அன்பின் பெருவிளைவே! ஆக்கத்தின் ஊற்றாகும்!
நல்ல தமிழாட்சி நாட்டில் நிலவுதற்கு
மெல்ல அறப்புரட்சி மேவுவதும் அன்பேயாம்!
இக்காலம் நாமடையும் எல்லா வசதிகளும்
தக்கார் பலரும் தமையொத்த மக்கள்
இனம்வாழ வேண்டும் என நினைத்த அன்பால்
முனைந்து முனைந்திங்கே முன்னேறி வந்தனவாம்!
நாட்டுக்கு நாடு தனக்குள்ளே ஒவ்வாது
போட்டியிற் புத்தம் புதுப்போர்க் கருவியெல்லாம்
உண்டாக்கி உண்டாக்கி ஊரை மிரட்டுவதும்
கெண்டை விழியாளே! அன்பின் மறுதோற்றம்!
என்றாலும், அன்பை அழிவிற் செலவிடுதல்

நன்றாமோ? அன்பால் நலந்தேட வேண்டுமடி!