பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

பாண்டிமாதேவி / முதல் பாகம்


தாழ்வுகள் இருந்தன. துணிவும், சாமர்தியமும், சூழ்ச்சிகளைப் பழகிய இராஜதந்திரமும் தேர்ந்தவனான நாராயணன் சேந்தன் எங்கே? பயந்த சுபாவம், எளிதில் பிறருக்கு அடங்கிவிடுகிற இயல்பு, ஒளிவு மறைவில்லாத எண்ணம், அப்படியே பேச்சு, அப்படியே செயல் எல்லாம் அமைந்த அண்டராதித்த வைணவன் எங்கே?

இப்படிக் குணரீதியாகப் பார்த்தால் நாராயணன் சேந்தனை மூத்தவனென்றும், அண்டராதித்த வைணவனை இளையவனென்றும் மாற்றிச் சொல்ல வேண்டியதாக நேரிட்டுவிடும். போகட்டும், கதை நிகழ்ச்சிக்கு வருவோம்.

முதல் யாமம் முடியப்போகிற தறுவாயில் அண்டராதித்த வைணவன் கதவைச் சாத்துவதற்காக அறக்கோட்டத்தின் வாசலில் வந்து நின்றானல்லவா? அப்போது தென்கிழக்குத் திசையிலுள்ள கிளை வழியிலிருந்து யாரோ இரண்டு மூன்று ஆட்கள் சத்திரத்தை நோக்கி வருவதுபோல் தோன்றியதனால் தான் அவன் கதவை அடைக்காமல் தயங்கி நின்றான்.

“கதவை அடைத்துவிட்டு உள்ளே வரப் போகிறீர்களா இல்லையா? குளிர் வாட்டி எடுக்கிறது!” என்று அதட்டுவது போன்ற தொனியில் வினவிக்கொண்டே நடுத்தர வயதுள்ள கோதை நாச்சியார் உட்புறத்தில் இருந்து வெளியே வந்தாள்.

“கொஞ்சம் பொறு, கோதை கிழக்கே துறைமுகச் சாலையிலிருந்து யாரோ ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பாவம் ! எவராவது வெளி தேசத்திலிருந்து கப்பலில் புதிதாக வந்து இறங்கியிருப்பார்கள். நாம் கதவை அடைத்துக் கொண்டு போய்விட்டால் தங்குவதற்கு இடமின்றி அவர்கள் திண்டாடப் போகிறார்கள்” எனறான.

“ஐயோ! என்ன கருணை! என்ன கருணை மகா மண்டலேசுவரர் சத்திரத்து மணியகாரர் பதவிக்குச் சரியான ஆளாகப் பிடித்துத்தான் நியமித்திருக்கிறார்” என்று அழகு காட்டினாள் அவன் மனைவி கோதை நாச்சியார்.