பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

103


கண்களில் கனல் பொறி பறக்க வந்து நின்ற கோதை நாச்சியாரைப் பார்த்து, “யாரா? யாரென்று நீயே வந்து கேள்! இவர்கள் பேசுவதைக் கேட்டால் மனிதர்கள் பேசுவதுபோல் தெரியவில்லை” என்று பதில் கூறினான் மணியகாரன்.

ஒரு பெண்ணுக்கு முன்னால் துச்சமான சொல்லுக்கோ செயலுக்கோ ஆளானால் அது யாருக்குத்தான் பொறுக்கும்? “அப்பனே! ஒழுங்காகப் பேசு!” என்று சொல்லிக் கொண்டே கையை ஓங்கிக்கொண்டு அண்டராதித்தன் மேல் பாய்ந்தான் ஒருவன்.

“அருகில் நெருங்கினாயோ பொசுக்கி விடுவேன் பொசுக்கி ‘ என்று தீப்பந்தத்தை ஓங்கினான் அண்டராதித்தன். உடனே இன்னொருவன் இடையிலிருந்த வாளை உருவினான். மற்றொருவன் கையிலிருந்த வேலை நீட்டினான். ‘ஐயோ! இந்தக் குண்டர்களிடம் எதற்காக வம்பு செய்தோம்? இவர்கள் ஆயுதபாணிகளாக வந்திருக்கிறார்களே’ என்று அப்போது தான் மனதில் பயம் உறைத்தது அவனுக்கு. கொடுமை தவழும் அவர்களுடைய கண்களைக் கவனிக்கையில் ‘இவர்கள் எந்தத் தீமையையும் கூசாமல் செய்துவிடக் கூடியவர்கள்’ என்று தோன்றியது.

“இதுதானா சத்திரம் என்று கேட்டால் பதில் சொல்வானா? தீவட்டியை ஓங்கிக்கொண்டு வருகிறான் மடையன்” என்று வந்தவர்களில் ஒருவன் தன் கடைசி வசை புராணத்தை வெளிப்படுத்திய அதே சமயத்தில், “இதுதான் சத்திரம் யார் ஐயா நீங்கள்: அகால வேளையில் வந்து கலவரம் செய்கிறீர்கள்? என்ன வேண்டும்?” என்று வினவிக் கொண்டு பெண்புலி போல் கணவனுக்கு முன் வந்தாள் கோதை.

பெண்ணின் முகத்துக்கு இந்த உலகத்தில் எப்போதும் இரண்டு பெரிய ஆற்றல்கள் உண்டு. பிறரைக் கவருவது; பிறரை அடக்குவது. கோதை நாச்சியார் வந்து நின்றவுடன் வாளையும், வேலையும் பார்த்துப் பயந்து சிறிதே நடுங்கிக் கொண்டிருந்த அண்டராதித்த வைணவனுக்குத் தெம்பு உண்டாயிற்று.