பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

பாண்டிமாதேவி / முதல் பாகம்


அந்தப் பெண் கோதை கலகலவென்று சிரித்துக் கொண்டு நின்றாள். அவள் தன் கையிலிருந்த செப்புக் கொப்பரையை அவர்கள் தலைகளுக்கு நேரே கவிழ்த்தாள். அந்த மூன்று ஆண்பிள்ளைகளின் நரம்புகள் யாவும் முறுக்கேறித் துடித்தன.


12. வசந்த மண்டபத்து இரகசியங்கள்

கன்னியாகுமரியிலிருந்து எவ்வளவோ அருமையாகப் பாதுகாத்துக்கொண்டு வந்த அந்த ஒலை கடைசியில் மகாமண்டலேசுவரர் மாளிகையின் அந்தரங்க அறையில் எரிந்து சாம்பலாகப் போகும்படி நேரிடுமென்று தளபதி வல்லாளதேவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

ஒலையை எரித்துச் சாம்பலாக்கிவிட்ட பெருமையோ என்னவோ, இடையாற்றுமங்கலம் நம்பி அவனைப் பார்த்து மிக அலட்சியமாகச் சிரித்தார்.

“என்ன தளபதி நான் இப்படித் திடீரென்று உன்னுடைய அநுமதியில்லாமலே நீ கொண்டு வந்த ஒலையை அழித்துவிட்டேன் என்ற வருத்தமா? ஏன் பேசாமல் உம்மென்று உட்கார்ந்திருக்கிறாய்? கவலையை விட்டுவிட்டு உறங்கச் செல், மற்றவற்றைக் காலையில் பேசிக்கொள்ளலாம்.”

அவருக்கு அவன் ஒரு பதிலும் சொல்லவில்லை. அதற்குள் அவரே மேலும் கூறினார்: “சேந்தா! பாவம், தளபதி இன்று மாலையிலிருந்து அடுத்தடுத்துப் பல அதிர்ச்சிகளுக்கு ஆளாகித் தொல்லைப்பட்டிருக்கிறார். மிகவும் களைத்துப் போயிருப்பார். விடிந்தால் மந்திராலோசனைக் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் போயாகவேண்டும். சிறிது நேரமாவது அவர் உறங்கட்டும் போ! விருந்தினர் மாளிகையில் கொண்டு போய்ப் படுக்கை ஒழித்துக் கொடு, வேண்டிய வசதிகளைக் கவனித்துக்கொள்” என்று நாராயணன் சேந்தனை நோக்கிக் கூறிவிட்டு, வல்லாளதேவன் பக்கமாகத் திரும்பி, ‘போ. வல்லாளதேவா! போய்