பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாண்டிமாதேவி

முதல் பாகம்

1. நீலத் திரைக்கடல் ஒரத்திலே

ன்பம் நிறைந்து பொங்கும் இயற்கையின் மகிழ்ச்சி வெள்ளம்போல் பொன்னிறம் போர்த்ததோர் அழகிய மாலைப் பொழுது. மேலே மஞ்சள் வானம்; கீழே நீலத் திரைக்கடல்; கரைமேல் குமரியன்னையின் ஓங்காரம் முழங்கும் தேவகோட்டம்.

ஏ!கடலே!சங்கமிருந்து தமிழ் வளர்த்த கபாடபுரத்தையும், தென் மதுரையையும் விழுங்கி உன் தமிழ்ப் பசியைத் தீர்த்துக்கொண்டாய்! இனி உன்னை இந்தத்தமிழ் மண்ணில் அணுவளவுகூடக் கவர விடமாட்டேன்’ என்று கடலுக்கு எச்சரிக்கை செய்வதுபோல் குமரி கன்னியா பகவதியார் கோயிலின் மணியோசை முழங்கிறது! சங்கொலி விம்முகிறது: ஆயிரமாயிரம் அலைக் குரல்களால் ஓலமிடும் அந்தப் பெருங்கடல் குமரித்தாயின் செந்தாமரைச் சிறு பாதங்களைப் பயபக்தியோடு எட்டித் தொட்டு மீள்வது போல் நீண்ட மதிற்கவரில் மோதி மீண்டு கொண்டிருக்கிறது.

அந்த மாலைப்போது ஒவ்வொரு நாளும் வந்து போகிற சாதாரண மாலைப் போதுகளில் ஒன்றா? அல்லவே அல்ல! பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் செந்தமிழ் நாட்டின் சரித்திரத்தில் காலத்தால் அழிக்கமுடியா நினைவுக்கும் நிகழ்ச்சிக்கும் இடமாக அமைந்த மாலைப்பொழுது அது!

தென்பாண்டிப் புறத்தாயநாடாகிய நாஞ்சில் நாட்டின்