பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

பாண்டிமாதேவி / முதல் பாகம்


முற்றத்துக் கதவை மறுபடியும் வேகமாகச் சாத்திவிட்டுத் திரும்பிப் படுக்கையில் வந்து உட்கார்ந்தான்.

ஒரு சில விநாடிகளே கழிந்திருக்கும். மீண்டும் அதே ஒசை! அதே இடத்திலிருந்து தொடங்கி மேற்கு நோக்கிச் சென்றது. இப்போது பாதாளக் கிணற்றுக்குள்ளேயிருந்து கேட்கிறமாதிரி “கசுமுசு'வென்று பேச்சுக்குரலும் கேட்பது போலிருந்தது. மனப்பிரமைதானோ? என்று தன்னை நம்புவதற்கே மறுத்தது அவன் மனம், இது உண்மையா? அல்லது நமக்கு மட்டுமே ஏற்படக்கூடிய மனப்பிரமையா? நாராயணன் சேந்தனைப் போய் அழைத்துக்கொண்டு வந்து இந்த மர்மத்தைச் சோதித்துப் பார்த்துவிட்டால் என்ன? இதற்கு முன்பு பகலில் எவ்வளவோ தடவைகள் இந்த மாளிகையில் வந்து தங்கியபோது இம்மாதிரி மர்மமான அநுபவம் எதுவும் ஏற்பட்டதில்லையே! என்ன ஆனாலும் சரி! நம்பியும், நம்பாமலும் இப்படித் தவிப்பதற்குள் நானே எழுந்திருந்து போய் நாராயணன் சேந்தனைக் கூப்பிட்டு வந்துவிடுகிறேனே ? என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக, விருந்தினர் மாளிகைக் கட்டிலிலிருந்து இறங்கி வெளியேறினான் அவன்.

இருட்டில் நிதானமாக நடந்து மாளிகையின் வாசற்படிக்கு அவன் வந்தபோது ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். எதிரே கையில் தீபத்துடன் நாராயணன் சேந்தனே அங்கு வந்து கொண்டிருந்தான். இதென்ன விந்தை! நெல் அளக்கும் தாழியைவிடக் குட்டையான இந்த மனிதன் ஏதாவது மாயம், மந்திரம் தெரிந்தவனா? இவனைச் சந்திக்கப் போனால் இவன் விழித்துக் கொண்டிருப்பானோ, அல்லது குறட்டை விட ஆரம்பித்திருப்பானோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டே நான் புறப்படுகிறேன். இவனோ நினைப்பதற்கு முன்னால் தானே கையில் சுடர்விடும் விளக்கோடு என் முன்னால் வந்து நிற்கிறான்’.

இவ்வாறு எண்ணிக்கொண்டு மாளிகையின் வாசலிலேயே நின்றுவிட்டான் வல்லாளதேவன். ஆனால் மறுவிநாடியே தன் அதுமானம் தவறு என்பது அவனுக்குப்