பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

பாண்டிமாதேவி / முதல் பாகம்


எங்கோ ஒரு மூலையில் சிறு மின்மினிப் பூச்சுபோல் சுரங்கப் பாதையில் தொலை தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சம் சிறிது சிறிதாக நகர்ந்து மேலே சென்று கொண்டிருந்ததனால் நாரயணன் சேந்தன் தீபம் ஏந்திய கையுடன் முன்னே சென்று கொண்டிருக்கிறா னென்று உய்த்துணர முடிந்தது.

தட்டுத் தடுமாறி வழியைத் தடவிக்கொண்டு தளபதி மேலே நடந்தான் . சிறிது தூரம் சென்றதும் கீழே பாறையும் மணலுமாக இருந்தன. அங்கே கலகலவென்று தண்ணிர் கசிந்து இனிய ஜலதரங்க நாதத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக, வருகிறவர்கள் நடப்பதற்குக் கல்தூண்களை நிறுத்தி அவற்றின் மேல் வரிசையாக மரப்பலகைகளைப் பாலம் போலப் பிணைத்திருந்தார்கள். அதன் மேல் நடக்கும்போது திடும்’ ‘திடும்’ என்ற ஓசை உண்டாயிற்று. அது விருந்தினர் மாளிகையில் தான் படுத்திருந்த பகுதிக்கு அடியில் இருக்கவேண்டுமென்று வல்லாளதேவன் நினைத்தான். தான் படுத்திருந்த இடத்தில் அந்த மாதிரி ஓசை உண்டானதற்குக் காரணம் அந்தச் சமயத்தில் சுரங்கத்துக்குள் அதே மரப்பாலத்தில் யாரோ நடந்து சென்றிருக்கிறார்களென்று அவனுக்குத் தோன்றியது. பறளியாற்றில் நீர் நிறைந்து பாய்வதால் அந்தச் சுரங்கத்துக்குள் நீர ஊறிக் கசிவு ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்துகொள்ள முடிந்தது.

முன்னால் விளக்குடன் போய்க் கொண்டிருக்கிற நாராயணன் சேந்தன் தான் நடக்கிற ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துவிடக்கூடாதே என்பதற்காக, மரப்பாலத்தில் பாதங்களை அழுத்தி ஊன்றாமல் மெள்ள நடந்து சென்றான் வல்லாளதேவன். கால் நாழிகை நடைக்குப்பின் பூமிக்கு அடியிலேயே கட்டப்பட்டிருந்த ஒரு விசாலமான மண்டபம் போன்ற இடம் அவனுடைய கண்பார்வையில் பட்டது.

அந்த மண்டபத்தில் வெளிச்சமாக இருந்தது. பேச்சுக் குரல்கள் கேட்டன. சுரங்கப் பாதையின் முடிவில்