பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

115


மண்டபத்துக்குள் நுழையும் இடத்தில் சுவரோடு சுவராகப் பதுங்கி நின்றுகொண்டு பார்த்தான் வல்லாளதேவன்.

அந்தப் பாதாள மண்டபத்தின் நாற்புறத்து இருண்ட மூலைகளிலும் அம்பாரம் அம்பாரமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த வாள்களையும், வேல்களையும், கேடயங்களையும், ஈட்டிகளையும், கவசங்களையும் பார்த்தபோது அவனுக்குத் திகைப்பு ஏற்பட்டது.

சற்றுமுன் அந்தரங்க மண்டபத்திலிருந்து அவனுக்கு விடைகொடுத்து அனுப்பிய மகாமண்டலேசுவரர் இப்போது இந்தப் பாதாள மண்டபத்துக்குள் நின்று கொண்டிருந்தார். அவருடைய திருப்புதல்வி குழல்மொழி நாச்சியார் இருந்தாள். இருட்டில் கொள்ளி ஏந்தி நிற்கும் குட்டைப் பேய் போல் நாராயணன் சேந்தன் தீபத்தைப் பிடித்துக்கொண்டு நின்றான். இவர்கள் மட்டும் இங்கே இப்போது இருந்திருந்தால் தளபதிக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கக் காரணமே இல்லையே!

வடதிசை மூவரசருக்கும், அரச பாரத்தைத் தாங்கும் சுமைக்கும் பயந்து இலங்கைத் தீவுக்கு ஓடிவிட்டதாக நினைக்கப்பட்ட குமார பாண்டியன் இராசசிம்மனும் இங்கே இவர்களோடு நிற்பதுபோல் தளபதிக்கு ஒரு பிரமை கண்களில் ஏற்பட்டது. ஆனால் அந்த பிரமை மறுகணமே நீங்கிவிட்டது. அவனுக்குக் குமார பாண்டியரைப்போல் காட்சியளித்து அவன் கண்களை ஒரு கணம் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது அந்த இளந்துறவியின் தோற்றம்தான். படகில் வரும் போது துறவியை எங்கோ கண்டிருப்பதுபோல் வந்த நினைவு அவன் மனத்தில் இப்போது உறுதிப்பட்டது.

“சேந்தா! அது என்ன? அந்த மூலையில் யாரோ ஒளிந்து நிற்பதுபோல் தெரிகிறதே? இப்படி விளக்கைக் கொண்டுவா"- என்று மகாமண்டலேசுவரர் தளபதி நின்ற மூலையைச் சுட்டிக்காட்டினார்.

உடனே சேந்தன் விளக்கோடு வர, மகாமண்டலேசுவரர் அவனைப் பின்பற்றித் தளபதி நின்றுகொண்டிருந்த மூலைக்கு வேகமாக வந்தார்.