பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

பாண்டிமாதேவி / முதல் பாகம்


எங்கிருந்தாலும் அவரை உடனே அழைத்துக் கொண்டு வருவதற்கு வேண்டிய செயல் திட்டங்களெல்லாம் நாளைக் கூட்டத்தில் உருவாகிவிடும்” என்றார் ஆசிரியர்.

“அதோடு விட்டுவிடமாட்டோம்; இளவரசர் திரும்பி வந்ததும் உடனடியாக அவருக்கு மகுடாபிஷேகத்தையும், கூடவே திருமணத்தையும் செய்து முடித்து விட்டால்தான் மகாராணியாருக்குப் பூரணமாகத் திருப்தி ஏற்படும்” என்று பவழக்கனிவாயர் கூறியபோது அங்கே அவர்களோடு உட்கார்ந்திருந்த விலாசினியும், பகவதியும் தலைகுனிந்து கொண்டனர். அந்த இளம் பெண்களின் கன்னங்களில் ஏன் அந்தச் சிவப்பு: கண்களில் மின்னும் அந்த ஒளிக்கு என்ன பெயர் சொல்லுவது?

எப்போதோ, சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை அரண்மனையில் கண்டிருந்த குமார பாண்டியரின் சுந்தரத் தோற்றம், அவர்கள் நினைவில் அப்போது காட்சியளித்திருக்க வேண்டும். பெண்களுக்கு நாணம் எவ்வளவு அழகாக இருக்கிறது: எத்தனையோ சமயங்களில் எத்தனையோ காரணங்களுக்காகப் பெண்களுக்கு நாணம் ஏற்படுகிறது. ஆனால் ஒரே ஒரு சமயத்தில் மட்டும் நாணத்தில் முழுமையான கணிவைக் காண முடிகிறது. திருமணமாகாத இளம்பெண்களுக்கு நடுவில் திருமணத்தைப் பற்றிப் பேசினால், உண்டாகிற நாணம் இருக்கிறதே, அதற்கு ஈடும் இல்லை, இணையும் இல்லை.

மேலும் சிறிது நேரம் வானவன்மாதேவிக்கு ஆறுதலை உண்டாக்குகிற விதத்தில் பேசிக்கொண்டிருந்து விட்டுப் பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் உறங்குவதற்குச் சென்றனர். போகும்போது பகவதியையும், விலாசினியையும் தனியே அழைத்து, “பெண்களே! இன்று மகாராணியின் மனநிலை சரியில்லை. கசப்பும் விரக்தியும் அடைந்த நிலையில் புண்பட்டு நொந்துபோயிருக்கிறார். எந்த விநாடியில் அவருக்கு என்ன தோன்றுமென்று ஒன்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. நீங்கள் இருவரும் இங்கேயே மகாராணியோடு படுத்துக் கொள்ளுங்கள். ஆடவர்களாகிய