பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

பாண்டிமாதேவி / முதல் பாகம்


விரிப்புக்கள், திண்டுகள், அணைகள் எல்லாம் அப்படியே இருந்தன. வாயிற் கதவுப்பக்கம் திரும்பிப் பார்த்தாள்! அது இலேசாகத் திறந்திருந்தது. அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் எச்சரித்து விட்டுப்போனது அவளுடைய நினைவில் மின்னலைப் போல் தோன்றியது, உடனே எழுந்திருந்து கதவைத் திறந்திருந்த வழியாகப் பகவதியும் கீழே இறங்கினாள். அந்த அறையின் வெளியே அந்தப்புரத்திலிருந்து பிற இடங்களுக்குச் செல்லும் இரண்டு மூன்று வழிகள் பிரிந்தன. படிக்கட்டில் இறங்கிக் கீழே வந்த பகவதி ஒரு கணம் வழிகள் பிரியும் இடத்தில் தயங்கி நின்றாள். அந்த அர்த்தராத்திரி வேளையில் என்ன நோக்கத்தோடு, எந்த வழியில் மகாராணி சென்றிருக்கக்கூடும் என்று அவளால் ஊகிக்க முடியவில்லை. திகைத்து நின்று கொண்டிருப்பதைக் காட்டிலும் மனத்துக்குத் தோன்றிய ஏதாவது ஒரு வழியில் போய்ப் பார்க்கலாமே ! நம்முடைய நல்லகாலமாக மகாராணியாரும் அதே வழியாகச் சென்றிருக்கலா மல்லவா?” என்று நினைத்தவளாய் நேரே செல்லும் வழியில் நடந்தாள். தீபங்களெல்லாம் அணைக்கப்பட்டிருந்ததனால் இருள் சூழ்ந்திருந்தது. வழி வளைந்து வளைந்து கீழ்நோக்கி இறங்கின. அந்த இருளில் அம்மாதிரிப் பழக்கமில்லாத பாதையில் பகவதியைத் தவிர வேறு எந்தப் பெண்ணாலும் அவ்வளவு துணிவாக நடந்து சென்றிருக்க முடியாது. அதை ஒரு சாகஸம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கடைசியாக, அவளைக் கோட்டைக்குள் ஒரு திறந்த வெளியான இடத்தில் கொண்டு போய் விட்டது அந்த வழி. ‘கம்'மென்று பவழ மல்லிகைப் பூக்களின் மணம் கமழ்ந்தது.

அது அரண்மனைப் பெண்கள் நீராடும் பகுதி. சிறுசிறு குளங்கள். அவற்றில் நிலா ஒளியையும் வானையும் பிரதி பலிக்கும் தெளிவான நீர். குளங்களின் நடுவே நீராழி மண்டபங்கள். சுற்றிலும் அடர்ந்த பவழ மல்லிகை மரங்கள். நிலாத் திகழும் வானவெளியின் நட்சத்திரங்களெல்லாம் அந்த மரக் கிளையில் வந்து அப்பிக் கொண்டது போல் வெண்ணிற