பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

125

மலர்கள் மலர்ந்திருந்தன. கீஇஇ என்ற ஒசை நிறைந்திருந்தது. அதோடு யாரோ மெல்லிய குரலில் விசும்பி அழுகிற ஒலி!பகவதி நாலா பக்கமும் மிரண்டு பார்த்துக் கொண்டே அந்த ஒலி வருகிற இடத்தைக் கண்டுபிடிப்பதற்காகச் சுற்றிச் சுற்றி வந்தாள், பவழ மல்லிகை மரங்களையும் நீராழி மண்டபத்தையும் கடந்து தென் கோடியில் வந்து பார்த்தாள். கோட்டைச் சுவரை ஒட்டினாற்போலிருந்த ஒரு பாழுங் கிணற்றின் விளிம்பில் மகாராணி விரித்த கூந்தலும் அழுத கண்களுமாக அமர்ந்து கொண்டிருந்தார். ஒசைப்படாமல் பின்புறமாக மெதுவாக நடந்துபோய் மகாராணி வானவன்மாதேவியின் கைகளைப் பற்றிக் கொண்டாள் பகவதி.


14. முரட்டுக் கரம்

அன்றொரு நாள் இரவு முன்சிறை அறக்கோட்டத்தில் வந்து அண்டராதித்தனுடன் வம்பு செய்தபின் அவன் மனைவியால் அவமானப்படுத்தப்பட்டுத் திரும்பியவர்கள் இன்னாரென்பதை நேயர்கள் இதற்குள் ஒருவாறு தெரிந்து கொண்டிருப்பார்கள்.

நாகைப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு விழிஞத்தில் வந்திறங்கிய ஒற்றர்களே அந்த ஆட்கள். முன் சிறை அறக்கோட்டத்தில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் திண்டாடிய அந்த இரவுக்குப்பின் அவர்கள் தென்பாண்டி நாட்டில் இரண்டொரு நாட்களை ஒளிவு மறைவாகக் கழித்து விட்டார்கள். நாஞ்சில் நாட்டு அரசாட்சி நிலைகளைப் பற்றியும், மகாராணி வானவன்மாதேவியைப் பற்றியும் எத்தனையோ செய்திகளை அறிந்து கொண்டார்கள். தாங்கள் அங்கே வந்த மறுநாளைக்கு மறுநாள் மகாராணி பெளர்ணமி தினத்தன்று கன்னியாகுமரியில் தரிசனத்துக்காக வரப்போகும் செய்தியும் அவர்களுக்குத் தெரிந்தது.