பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

பாண்டிமாதேவி / முதல் பாகம்


தாங்கள் எந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்காக வந்தார்களோ அதை நிறைவேற்றுவதற்கு மகாராணியின் கன்னியாகுமரி விஜயத்தைப் பயன்படுத்திக் கொள்வதென்று தீர்மானித்தனர். அங்கே, இங்கே தங்குவதற்கு இடம் தேடாமல் நேரே கன்னியாகுமரிக்கே போய்ச் சேர்ந்து விட்டனர். அங்கேயும் தங்குவதற்குச் சரியான இடம் கிடைக்கவில்லை. கடற்கரையோரத்துச் சோலைகளிலும், தோட்டங்களிலும் தங்குவதை மட்டும் யாரும் தடுக்க முன் வரவில்லை.

மகாராணி விஜயம் செய்வதற்கு முன்தினமே கன்னியாகுமரிக்குச் சென்று விட்டதால் சில முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு அவர்களுக்கு வசதியாக இருந்தது. எங்கே ஒளிந்திருப்பது? தங்கள் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது? எப்படித் தப்புவது? என்பது போன்ற முன்னேற்பாடுகளைப் பக்குவமாகக் செய்து வைத்துக் கொண்டு விட்டனர், வடதிசைப் பேரரசரின் அந்த ஒற்றர்கள். இதன் விளைவாக ஏற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்த அத்தியாயங்களில் தெரிந்து கொண்டுவிட்டோம். அந்த ஒற்றர்கள் எண்ணியபடியோ, திட்டமிட்டபடியோ எதுவும் நடக்கவில்லை. கன்னியாகுமரியிலிருந்து தப்பி வருவது பிரும்மப் பிரயத்தனமாகி விட்டது அவர்களுக்கு. அன்றைய தினம் இரண்டு பெரிய அதிர்ச்சிகளுக்கு ஆளாகிவிட்டனர் அவர்கள். ஒன்று அவர்கள் மூவரும் திட்டமிட்டு எதிர்பார்த்திருந்தபடி குமரிக் கோவில் பிராகாரத்தில் வானவன் மாதேவியின் மேல் வேலை எறிந்து கொல்ல முடியாமற் போனது; மற்றொன்று இடையாற்று மங்கலம் நம்பியிடம் கொடுக்கப்படவேண்டிய திருமுகவோலை; அந்த ஒலையில் குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சியைச் செய்து முடிப்பதற்கு முன்பே, தளபதி வல்லாளதேவனின் கையில் சிக்கியது.

இந்த இரண்டு எதிர்பாராத அதிர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டுத் தாங்கள் அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றித் திரும்பவில்லையானால் ஆத்திரக்காரனான