பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“கோதை! இந்த யாத்திரீகர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு நீ கன்னியாகுமரிக்குப் போய்விட்டு வா. நான் இங்கே இருந்து ஆகவேண்டிய காரியங்களைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று அவன் அவளிடம் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவள் அதற்கு இணங்கவில்லை. அதற்கு மேல் இன்னும் வற்புறுத்தியிருந்தால் இணங்கியிருப்பாளோ என்னவோ? அவன் வற்புறுத்தவில்லை. தானே யாத்திரீகர்களை அழைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டான்.

“கோதை! யாருக்கென்ன வந்ததென்று நீ பாட்டுக்குச் சத்திரத்துக் கதவை அடைத்துக்கொண்டு தூங்கிவிடாதே, நாங்கள் இரண்டாம் யாமம் முடிவதற்குள் எப்படியும் திரும்பி வந்துவிடுவோம். வயிற்றைக் காயப்போட்டு விடாதே” என்று போகும்போது சிரித்துக்கொண்டு சொல்லிவிட்டுப் போனான் அண்டராதித்தன்.

கோதையின் கணவனும், சத்திரத்தில் தங்கியிருந்தவர் களும் மாலையிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கமுடியும் அளவுக்குப் பெரும் பரப்புள்ள அந்தச் சத்திரத்தில் இப்போது மூன்றே மூன்று பெண்கள் மட்டும் தனித்திருந்தனர். சத்திரத்து மடைப்பள்ளிகளில் சமையல் வேலை செய்யும் இரண்டு பணிப்பெண்கள் தவிரக் கோதை நாச்சியார் ஒருத்தி ஆக மொத்தம் மூன்று பேர்கள்தான். பணிப்பெண்கள் இரவுச் சாப்பாட்டுக்காக அடுப்புமூட்டிச் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். கோதை நாச்சியார் சமையலுக்கு வேண்டிய படித்தரப் பொருள்களை உக்கிராணத்துக் கட்டளை அறையிலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டு மேற்பார்த்துக் கொண்டிருந்தாள். சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த பணிப்பெண்கள் இரண்டுபேரும் கோதையின் நகைச்சுவையில் ஈடுபட்டு அடிக்கடி குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். முன்சிறை அறக்கோட்டத்தில் தங்குபவர்களுக்குச் சுவையான வசதிகள் இரண்டு. ஒன்று அங்கே வருவோரை உபசரிக்க விருந்தோம்புகிற முறை. இரண்டாவது: அந்த அறக்கோட்டத்தை நிர்வாகம்