பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

139


“ஆனால் மகாராணியாரின் உயிருக்குயிரான புதல்வராக வும் எதிர்காலத்தில் முடிசூடி இந்த நாட்டை ஆளவேண்டியவராகவும் இருக்கும் குமார பாண்டியர் ஈழத் தீவுக்குள் ஒடி விட்டதாகப் பொய்ச் செய்தியைப் பரவவிட்டு அதைத் தாமும் நம்புவதுபோல் நடித்துக்கொண்டிருக்கும் இந்த மனிதர் அதே இளவரசரைப்போல் தோன்றும் ஒரு துறவியை உலகத்துக்குத் தெரியாமல் தம்முடைய மாளிகையில் ஒளித்து வைத்துக் கொண்டு ஏமாற்றுவதின் மர்மம் என்ன? துறவி மகாமண்டலேசுவரருக்குக் கட்டுப்பட்டு விருப்பத்தோடு இங்கே தங்கியிருக்கிறாரா? அல்லது பயந்த சுபாவமுடையவராக இருந்து பயமுறுத்திச் சிறைப்படுத்தி வைத்திருப்பதுபோல் இவர் தம்முடைய வசந்த மண்டபத்திலும் பாதாள மண்டபத்திலும் அடைத்து வெளியேற விடாமல் தடுத்திருக்கிறாரோ ? உண்மை எதுவோ?

“ஐயோ! வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் இயல்புடையவராகிய நம் மகாராணியார் இந்த இடையாற்று மங்கலம் நம்பியின்மேல் எவ்வளவு நம்பிக்கையும், பயபக்தி விசுவாசமும் கொண்டிருக்கிறார்? இவரோ, உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைக்கிறாரே! இவரையே நம்பியிருக்கும் மகாராணியாருக்கு இவர் செய்து கொண்டிருக்கிற துரோகம் எவ்வளவு பெரியது? இது தெரிந்தால் மகாராணியின் மனம் என்ன பாடுபடும்? எவ்வளவு வேதனை ஏற்படும்? என்னுடைய மனமே இந்தப் பாடுபடுகின்றதே?

“ஆகா, பசுத்தோல் போர்த்துக்கொண்டு திரியும் வேங்கையைப்போல் இந்த மனிதர் மகாராணியாரைப் புறத்தாய நாட்டுக்கோட்டைக்கு அழைத்து வந்ததும், ஆதரவளித்ததும் இதற்குத்தானா? இது தெரியாமல் ஊர் உலகமெல்லாம் இது இவருடைய ராஜபக்தியைக் குறிப்பதாக எண்ணிப் பெருமை கொண்டாடுகிறதே? பேருக்கு மகாராணியைப் பாண்டிமாதேவி என்று இங்கே கொண்டுவந்து உட்கார்த்தி விட்டு ஈழத் தீவுக்கு ஒடிவிட்டதாக நாட்டிலுள்ளவர்கள் எண்ணிக்கொள்ளும்படி செய்த குமாரபாண்டியனைப் பயமுறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். வடதிசைப் பேரரசர்களுக்கு உதவி செய்து இந்தத் தென்பாண்டி நாட்டையும் அவர்களிடம் பறித்துக்