பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

பாண்டிமாதேவி / முதல் பாகம்


களைப்பையும் மறந்து இடையாற்றுமங்கலத்திற்குச் செல்லும் கிளை வழியில்வேகமாக நடந்தன. சுசீந்திரம் வரையில் வழி, ஒரே சாலையாகச் சென்று பாதிரித் தோட்டத்துக்குத் தெற்கே விழிஞம், குமரி, இடையாற்றுமங்கலம் என்று மூன்று இடங்களுக்கும் தனித்தனியே பிரிகிறது.

ஜனசஞ்சாரமற்ற, ஒசை ஒலிகள் அடங்கிப்போன அந்த நள்ளிரவில் தன்னந்தனியனாய் மனத்தில் கவலைகளையும், குதி காலில் களைப்பையும் சுமந்து கொண்டு நாராயணன் சேந்தனைக் கண்டு ஒரு வழி செய்யலாம் என்ற ஒரே நம்பிக்கையோடு அண்டராதித்தன் நடந்து கொண்டிருந்தான்.

பாதிரித் தோட்டத்தை நெருங்கியபோது சாலையில் அவன் மேலே நடந்து செல்ல முடியாத நிலை ஒன்று ஏற்பட்டது. யாரோ ஒர் ஆள் அசுரவேகத்தில் குதிரையை விரட்டிக்கொண்டு வந்தான். குதிரை பாய்ந்தோடிச் சென்ற வேகத்தில் அதன் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தவனின் தோற்றத்தைக்கூடச் சரியாகப் பார்க்கமுடியவில்லை. அடுத்து அந்தக் குதிரைக்குப் பின்னால், தலைதெறித்துப் போகிறாற் போன்ற வேகத்தில் இரண்டு மூன்று ஆட்கள் துரத்திக் கொண்டு ஓடுவதையும் அவன் பார்த்தான். சாலையோரத்தில் ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டு அவர்கள் செல்கிறவரை தாமதித்தான் அண்டராதித்த வைணவன்.

சாலையில் ஏற்பட்ட புழுதி அடங்குவதற்காகக் கண்களை மூடிக்கொண்டு ஒரமாக ஒதுங்கி நின்றவன், சரி! யார் குதிரையில் போனால் என்ன ? எனக்கு என்ன வந்தது?’ என்று நினைத்தவனாய் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு மேலே நடப்பதற்காக அடி எடுத்து வைத்தபோது சாலையோரத்து மரத்தடியில் யாரோ முனகுவது போல் தீனக்குரலில் ஒலி எழுந்தது.

“யார் அங்கே?” என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே மரத்தடிக்குத் திரும்பிச் சென்றான் அண்டராதித்தன். அவன் உடல் நடுங்கியது! மனத்தில் பயமும் பதற்றமும் ஏற்பட்டன. பக்கத்தில் சென்றபோது வாயில்