பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

155


நாராயணன் சேந்தன் படகோட்டியைக் கண்டு விசாரித்து வருவதற்காக அவன் குடிசையை நோக்கிப் புறப்பட்டான். அதுவும் மகாமண்டலேசுவரரின் சொற்களைத் தட்டக்கூடாதே என்பதற்காகத்தான். அவன் மனத்தைப் பொறுத்தவரையில், தளபதி வல்லாளதேவன் அப்போது அந்தத் தீவிலேயே இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. தளபதி முதல் நாள் இரவு படுத்துக்கொள்ளச் சென்றபோது, தன்னிடம் குத்தலாகக் கேட்ட கேள்விகளை நினைத்துப் பார்த்தபோது அவன் எண்ணம் வலுப்பட்டது. ஏதேனும் ஒரு விதத்தில் தளபதி வல்லாளதேவனுக்கு மகாமண்டலேசுவரரிடம் அவநம்பிக்கையோ, அதிருப்தியோ ஏற்பட்டிருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. சாதாரணமாக இப்படித் தனக்கு ஏற்படுகிற சந்தேகங்களை உடனே இடையாற்று மங்கலம் நம்பியிடம் தெரிவித்துவிடுவது அவன் வழக்கம். அன்று ஏனோ தளபதியைப் பற்றித் தன் மனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை உடனடியாகத் தெரிவித்துவிட வேண்டுமென்ற எழுச்சியோ ஆர்வமோ அவனுக்கு உண்டாகவில்லை.

படகோட்டி அம்பலவன் வேளானின் குடிசை தோணித்துறைக்கு அருகே பறளியாற்றின் கரையில் அமைந்திருந்தது. எண்ணங்களின் சுமை கணக்கும் மனத்துடன் தன்போக்கில் அம்பலவன் வேளானின் இருப்பிடத்துக்கு நடந்து கொண்டிருந்த நாராயணன் சேந்தன் எதிரே வந்த யார் மேலேயோ பட்டென்று மோதிக் கொள்வதற்கு இருந்தான்.

“ஐயா! எங்கே இப்படி? அதிகாலை நேரத்தில் கிளம்பி விட்டீர்கள்?’ என்று எதிரே வந்த ஆள் விலகி நின்று கேட்டபோது, அது அம்பலவன் வேளான் குரல்தான் என்பதைப் புரிந்து கொண்டு நிமிர்ந்தான் நாராயணன் சேந்தன். “நல்ல வேளை கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுபோல் நீயே வந்துவிட்டாய்? உன்னைத்தான் அப்பா தேடிக் கொண்டு புறப்பட்டேன். உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் விசாரிக்கவேண்டும்” என்று தணிந்த குரலில் அவனிடம் கூறினான் சேந்தன். அதைக் கேட்டுக் கொண்டே “ஐயா! இந்த அநியாயத்தைக் கேட்டீர்களா? நான் என்ன செய்வேன்?