பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

பாண்டிமாதேவி / முதல் பாகம்


புறப்படுவதற்கு முன்னால் இறுதியாகத் தளபதி வல்லாளதேவனுக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தான்.

“நீங்கள் போகலாம். நான்கூட இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வருவேன்” என்று சொல்லி அனுப்புவதற்காகத் தளபதி வாய் திறந்தபோது கீழ்ப்புறம் இடையாற்று மங்கலத்துக் கிளைவழியில் குதிரை வரும் ஒலி கேட்டது. வல்லாளதேவன் வியப்போடு திரும்பிப் பார்த்தான். குதிரைமேல் வந்து கொண்டிருந்த வீரன் அவர்களை நோக்கித்தான் வருவது போல் தெரிந்தது.

“நீங்கள் புறப்படுங்கள்! தாமதிக்க வேண்டாம்” என்று குழைக்காதனைத் துரிதப்படுத்தினான் தளபதி, “யாரோ வருகிறாற் போலிருக்கிறதே!” என்று சொல்லித் தயங்கினான் குழைக்காதன்.

“வரட்டும்! நான் பார்த்து விசாரித்துக் கொள்கிறேன். நீங்கள் நிற்கக் கூடாது. உடனே புறப்பட்டு விடுங்கள்."தளபதியின் குரலிலிருந்த அவசரத்தைப் புரிந்துகொண்டு குழைக்காதன் படைகளுடன் கிளம்பினான். அவனும் படைகளும் மேற்கே சிறிது துாரம் சென்று மறையும் வரையில் பார்த்துக்கொண்டிருந்து விட்டுக் கிளம்பினான் தளபதி வல்லாளதேவன். யாரோ சிரிக்கும் ஒலி கேட்டது.

“என்ன தளபதி ஆபத்துதவிகளை அனுப்பி யாயிற்றல்லவா?” என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே கேட்டவாறு குதிரையிலிருந்து இறங்கினான் நாராயணன்


19. துறவியின் காதல்

இடையாற்றுமங்கலம் தீவில் வைகறையின் அழகிய சூழ்நிலையில் வசந்தமண்டபத்துப் பொழிலிலுள்ள மரங்கள் அசைந்தன. இலைகளிலும், பூக்களிலும், புல் நுனிகளிலும் முத்துப்போல் திரண்டிருந்த வெண்பனித் துளிகள் இளகி