பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

165

உதிர்ந்தன. பொழிலில் மலர்ந்திருந்த சண்பகம், கோங்கு, வேங்கை, மல்லிகை, முல்லை மலர்களின் நறுமணத்தைத் தென்றல்காற்று வாரிக் கொண்டு வந்தது. வாவிகளிலும் சித்திரப் பூங்குளத்திலும், செம்மையும், வெண்மையுமாக ஆம்பலும், தாமரையும், அலர்ந்து விரிந்து, வண்டுகளை விருந்துக்கு அழைத்தன. காதலனின் பருத்த தோளைத் தன் மெல்லிய கைகளால் அனைத்துத் தழுவும் காதலியைப்போல் கரையோரத்து மரங்களின் பருத்த அடிப்பகுதியைப் பறளியாற்று நீர்த்தரங்கள் தழுவிச் சென்றன. இலைகளிலும் பூக்களிலும், குங்கு மக்கரைசல் போல் பொங்கிவரும் செந்நீர்ப் பரப்பிலும், இளங் கதிரவனின் ஒளிக்கதிர்கள் மின்னின. வசந்த மண்டபத்து விமான மதிற்கவர்களின் மாடங்களில் அடைந்துகிடந்த மணிப்புறாக்கள் கூட்டமாக வெளிப்பட்டுப் பறந்தன.

பொழுது புலர்ந்துவிட்டது. ஒளியின் ஆட்சிக்கு உரியவன் கிழக்கே அடிவானத்தைக் கிளைத்துக்கொண்டு கிளர்ந்தெழுந்து விட்டான். ஆனால் வசந்த மண்டபத்துப் பள்ளியறையின் பொற்கட்டிலில் இரத்தினக்கம்பள விரிப்புக்களின் மேல் படுத்துக் கொண்டிருந்த அந்த இளந் துறவி மட்டும் இன்னும் விழித்துக்கொள்ளவில்லை. ஐயோ, பாவம் ! நன்றாக அயர்ந்து தூங்குகிறார் போலிருக்கிறது. பள்ளியறையின் அழகிய ஓவியப் பலகணி வழியே ஒளிக்கதிர்கள் கட்டிலின் விளிம்பில் பட்டும் அவர் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறார்.

அப்போது அந்தப் பள்ளியறையின் கதவுகளைச் செந்தாமரை மலர் போன்ற அழகும், சண்பக அரும்பு போன்ற விரல்களும் பொருந்திய வளை குலுங்கும் கரம் ஒன்று மெல்லத் தட்டியது. செம்பொன் நிறம் பொருந்திய அந்தப் பெண் கரம் முன் கையில் வெண்மையான சங்கு வளையல்களையும் விரல்களில் பொன் மோதிரங்களையும் அணிந்திருந்தது.

வனப்பு நிறைந்த அந்த மலர்க் கரத்துக்கு உரியவள் யார்? அருகில் நெருங்கிப் பார்க்கலாம். ஆ! இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி குழல்வாய்மொழி அல்லவா இவள்? அடடா? இந்த விடியற்காலை நேரத்தில் இவ்வளவு அழகான