பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

பாண்டிமாதேவி / முதல் பாகம்


பூம்பொழிலின் இடையே அலங்காரமான வசந்த மண்டபத்தின் கதவருகே தங்கப்பதுமை ஒன்று உயிர் பெற்று நிற்பது போல் அல்லவா நிற்கிறாள்? நீராடி, அகிற்பூகையூட்டிய கூந்தல் மேகக் காடுபோல் விளங்கியது. அந்த மேகக் காட்டில் மின்னும் பிறைமதிபோல் கொடை மல்லிகைச்சரத்தை அள்ளி முடித்திருந்தாள். சுழலும் கருவண்டுகள்போல் பிறழும் கெண்டை மீன்கள்போல் மலர்ந்த விழிகளும், சிரிக்கும் செம்பவழ இதழ்களுமாகக் கதவருகே தயங்கி நின்றாள் குழல்மொழி.

உறங்கிக் கொண்டிருப்ப வரை எழுப்பிவிட வேண்டுமென்றும் ஆசை. அதே சமயத்தில் கதவைப் பலமாகத் தட்டி ஓசை உண்டாக்குவதற்கும் பயமாக இருந்தது. தயங்கித் துவண்டு மின்னலோ எனச் சிறிய இடை நெளிய அவள் நின்ற தோற்றம் நெஞ்சத்தைச் சூறையாடுவதாக இருந்தது.

பலகணியின் வழியே எட்டிப் பார்த்து, “அடிகளே!” என்று கிளி மிழற்றுவதுபோல் மெல்லக் கூப்பிட்டாள் அவள். பள்ளியறைக் கட்டிலில் படுத்திருந்த இளந் துறவி புரண்டு படுத்தார்.

“அடிகளே ! இன்னும் உறக்கத்தை உதறிவிட்டு எழுந்திருப்பதற்கு உங்களுக்கு மனம் வர வில்லையா? பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டதே?” இரண்டாவது முறையாகச் சற்று இரைந்தே கூப்பிட்டாள் குழல்மொழி. அதனோடு கதவிலும் தட்டவே, தட்டிய ஒலி அதைச் செய்த மென்பூங்கைகளில் செறிந்திருந்த வளைகளின் ஒலி-எல்லாமாகச் சேர்ந்து துறவியின் உறக்கத்துக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடிவிட்டன; துறவி கண் விழித்தார். மஞ்சத்தில் எழுந்து உட்கார்ந்தார். விரத நியமங்களாலும், தவத்தாலும் வருந்திய ஒரு துறவியின் உடம்பு போலவா தோன்றுகிறது. அது: ஆகா! என்ன கட்டழகு? தீக்கொழுந்துபோல் எவ்வளவு சிவப்பான நிறம்? வாலிபத்தின் அழகு முழுமையாய் நிறைந்து, ஆசையைக்களையும் தவத் தொழிலில் இருந்து தம்மைக் காண்போர் கண்களின் ஆசையை வளர்த்துவிடும் போலிருக்கிறதே, இந்தத் துறவியின் தோற்றம்!

“ஓ! நீயா? இந்த நேரத்துக்குள் எழுந்து நீராடி, பூச்சூடி அலங்கரித்துக்கொண்டு என்னையும் எழுப்புவதற்கு வந்து