பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

15


பரவியது. சந்தேகங்களும், குழப்பங்களும் அடுக்கடுக்காகத் தோன்றின.

மாலை ஒளி குறைந்து பொழுது மங்கிக்கொண்டே வந்தது. ஆனாலும் முழுமதியின் நிலா ஒளியில் அந்த இடத்தை அவன் நன்றாகப் பார்க்க முடிந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய அலை பாய்ந்து வந்து அந்தப் பாறைப் பிளவை மறைத்தது. வல்லாளதேவன் திரும்பிப் பார்த்தான். கோவில் வாயிலில் கண்ணைக் கவரும் தீபாலங்காரங்களுக் கிடையே அர்ச்சகர்களின் வாழ்த்தொலியும், மங்கள வாத்தியங்களின் இன்னிசையும், அடிகள்மார் பாடும் பண்ணிறைந்த பாட்டொலியுமாக மகாராணியாருக்கு வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.

ஒரே ஒரு கணம் ! அவன் மனத்தில் ஒரு சிறிய போராட்டம்! கோவில் வாயிலுக்குப் போய்க் கோலாகலமான வரவேற்பில் கலந்துகொள்வதா? கீழே இறங்கி அந்தக் கடலோரத்துப் பாறைப் பிளவில் மறைந்து கொண்டிருக்கும் ‘தலைப்பாகைகளைப் பின்தொடர்வதா? இன்னும் ஒரிரு விநாடிகள் தாமதித்தாலும் மேடும் பள்ளமுமாக முண்டும் முடிச்சுமாக நெடுந்துாரம் பரவியிருக்கும் அந்தப் பாறை பிரதேசத்தில் குறிப்பிட்ட உருவங்கள் எந்த வழியாகச் சென்று எப்படி மறையுமென்று கூறமுடியாது. ஆர அமரச் சிந்தித்து நிதானமாக ஒரு முடிவுக்கு வர அவனுக்கு அவகாசமில்லை.

அரைப் பனை உயரமுள்ள அந்தப் பாறை விளிம்புக்கு வந்து வேகமாகக் கீழே மணற் பரப்பில் தாவிக் குதித்தான். முழங்காலளவு கடல் நீரில் நடந்து சென்றால்தான் அந்தப் பாறைப் பிளவை நெருங்க முடியும். தளபதியின் கால்களில் அதற்கு முன்பில்லாத சுறுசுறுப்பும் விரைவும் ஏற்பட்டன. நீரைக் கடந்து செல்லும்போது குறுக்கிட்ட இரண்டொரு அலைகள் அவனை நன்றாக நனைத்துவிட்டன. வேகமாக வந்து முகத்தில் அறைந்த கடல் நீர் மூக்கின் வழியே வாயில் புகுந்து உப்புக் கரித்தது. கண்கள் காந்தின. எதிரே பார்க்காமல்