பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20. கோட்டையில் நடந்த கூட்டம்

நாராயணன் சேந்தன் கேட்ட கேள்வியைச் செவியுற்றதும் தளபதி வல்லாளதேவன் திகைத்துப்போனான்.

“என்ன கேட்டாய்?”-மீண்டும் சந்தேகத்தோடு வினவினான் தளபதி.

“ஒன்றுமில்லை! நேற்று இரவோடு இரவாக யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் நீங்களாகவே படகைச் செலுத்திக் கொண்டு அவ்வளவு அவசரம் அவசரமாய் ஓடிவந்தீர்களே! வந்த காரியத்தைச் செய்தாயிற்றோ இல்லையோ என்றுதான் கேட்டேன்.”

தளபதி சேந்தனைச் சந்தேகத்தோடு பார்த்தான். அந்தக் குட்டையன் தன்னை வெற்றி கொண்டுவிட்டதுபோல் எண்ணிச் சிரித்த சிரிப்பு தளபதி வல்லாளதேவனின் உள்ளத்தில் எரிச்சலை உண்டாக்கியது.

“எனக்கு அங்கே உறக்கம் வரவில்லை, படகுத் துறைக்கு வந்து பார்த்தேன். படகு தயாராக இருந்தது. எடுத்துக்கொண்டு புறப்பட்டுவிட்டேன். அவ்வளவுதான்; நான் அங்கிருந்து புறப்பட்டதற்கு வேறு எந்த முக்கியமோ அவசரமோ இல்லை” என்றான் தளபதி.

நாராயணன் சேந்தன் இதைக் கேட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

‘தளபதி! கொல்லர் தெருவிலேயே ஊசி விற்க நினைக்கிறீர்கள் நீங்கள். ஆபத்துதவிப் படைகளைக் கோட்டைக்கு அனுப்பவேண்டுமென்பதற்காகவே நீங்கள் இங்கு வந்ததும் எனக்குத் தெரியும். இப்போது அனுப்பிவிட்டுத்தான் இங்கே நிற்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்.”

தளபதி ஆத்திரத்தோடு சேந்தனை உற்றுப் பார்த்தான். நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்கள் விதை நெல்லைச் சேர்த்துவைக்கும் நெல்லுக்குதிர் போன்ற உருவத்தையுடைய சேந்தனைக் கோபம்தீர உதைத்துவிட வேண்டும் போல் கை