பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

175


கட்டுப்பாடு இன்றி அவர்கள் தாராளமாகப் பேசியதற்குக் காரணம் தனிமைதான். தங்களைவிடப் பெரியவர்கள், தங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் அப்போது யாரும் இல்லை என்ற துணிவுந்தான். அவர்கள் எல்லோரும் நன்றாக தமிழ் நூல்களைக் கற்றுத் தன்னடக்கமும், பண்பும் நன்றாக வாய்க்கப் பெற்றவர்தாம். பொறுப்பின்றி வாய்க்குவந்தபடி பேசுதல், அளவுக்கு அதிகமான உணர்ச்சி வயப்படுதல் இவற்றால் விளையும் கேடுகளைத் திருக்குறளில் படித்திருந்தார்கள்.

துணிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க் கிறுதி யாகிவிடும்

என்றெல்லாம் படித்திருந்தால் மட்டும் போதுமா ? மந்திராலோசனை மண்டபத்தின் அரங்கத்தைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டுத் திரைச் சிலைக்குப் பின்னால் மறைந்து நின்று செவிப்புலனின் உணர்வைக் கூர்மையாக்கிக்கொண்டு ஒன்று விடாமல் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனித உருவத்தைப் பார்த்திருந்தால் அவர்கள் அப்படிப் பேசியிருக்கமாட்டார்கள்.

“இந்தத் தென்பாண்டி நாட்டுக்கு ஒரு பொல்லாத சோதனைக் காலம், தேசத்தின் பெரிய பெரிய அரசியல் பொறுப்புகள் தாய் இழந்த பிள்ளைகளைப் போல் ஆகிவிட்டன. எவனோ ஊர் பேர் தெரியாத ஒற்றன் மகாராணியாரை வேல் எறிந்து கொல்லத் துணிந்துவிட்டான் என்றால் நம்முடைய வீரத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம் ?” என்றார் தோவாழைக் கூற்றத்து நன்கனிநாதர்.

“மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலம் தீவை விட்டு, அந்தப்புறம், இந்தப்புறம் அசையாமல் நாட்டு நிலையைப் பற்றிக் கவலையே இன்றி உட்கார்ந்திருக்கிறார். தென்திசைப் படைகளும், படைத் தலைவர்களும் வேளை தவறாமல் உடல் கொழுக்கத் தின்றுவிட்டுப் பொழுது போகாமல், படைப்பள்ளியில் தாயமும், சதுரங்கமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்களாமே? இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்?” என்று ஆத்திரத்தோடு