பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

179


கொண்டருக்கலாம். ஊம்! நினைத்துப் பயன் என்ன? கூட்டம் முடிவதற்குள் அங்கு எப்படிப் போக முடியும்!

இத்தகைய நினைவுகளோடு குதிரையில் சென்று கொண்டிருந்த வல்லாளதேவன் அடிக்கெர்ருதரம் பெருமூச்சு விட்டான். பக்கத்தில் குதிரையை மெதுவாகச் செலுத்தியவாறே வந்துகொண்டிருந்த நாராயணன் சேந்தன் தளபதியின் முக மாறுதல்களையும் பிற செயல்களையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டு வந்தான். அக்காலத்தில் திருநந்திக் கரையும், அதைச் சூழ அமைந்திருந்த இடங்களும் பூதப்பாண்டி முதலிய சிற்றுார்களும் சமணர்களும் அவர்களுடைய திருமடங்களும், தவப்பள்ளிகளும் நிறைந்துள்ள பிரதேசமாக இருந்தன. காலஞ்சென்ற பேரரசர் பராந்தக பாண்டியர் சைவ சமயத்தைப் போற்றி வளர்த்தாலும் ஏனைய சமயங்கள் வளரவும் உறுதுணை புரிந்தார். தமது அரசாட்சிக் காலத்தில் திருநந்திக் கரையிலுள்ள சமணப் பெரும்பள்ளிகள் சிறப்பாக நடைபெறுவதற்காக அவர் அளித்த பள்ளிச் சந்தங்கள் பல. சமணர்கள் சீராக வாழ்ந்த காலத்தில் திருநந்திக் கரை மலைப் பகுதிகளில் அற்புதமான குகைக் கோவில்களைக் குடைந்தார்கள். சமண மதம் இப்போதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு சிறப்போடில்லை யானாலும் அதன் பெருமைக்குரிய அடையாளங்கள் அங்கங்கே தென்படத்தான் செய்தன.

சமணர் திருமடங்களும், பெருந்தவப் பள்ளிகளும் நிறைந்த ஒரு பகுதியில் தளபதியும் சேந்தனும் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றனர். அழுக்கடைந்த ஆடையும் மயிற்பீலி தாங்கிய கையுமாகச் சமணத் துறவிமார்கள் வீதியில் அங்கும் இங்குமாகப் போய் வந்து கொண்டிருந்தனர்.

“சேந்தா! தண்ணிர் வேட்கை அதிகமாக இருக்கிறது. இங்கே பருகுவதற்கு நீர் கிடைக்குமா?” என்று ஒரு சமணப் பள்ளியைச் சுட்டிக்காட்டிச் சேந்தனிடம் கேட்டான் தளபதி.

“கிடைக்கும்! இறங்கி உள்ளே போய்க் கேளுங்கள். அது வரை நான் குதிரையைப் பார்த்துக்கொண்டு இங்கே இருக்கிறேன்” என்றான் நாராயணன் சேந்தன்.