பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

187


வல்லாளதேவன் கூட வெளியிட முடியாத விருப்பம் அது. இன்றுவரை இடையாற்று மங்கலம் மாளிகையின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் குறைவின்றி முழுமையாகப் பார்த்தவர் மகாமண்டலேசுவரரைத் தவிர வேறு யாருமில்லை. அவருடைய அருமைப் புதல்வியான குழல்மொழிக்கும் அந்தரங்க ஒற்றனான நாராயணன் சேந்தனுக்கும் கூடத் தெரியாத இரகசியப் பகுதிகள், பாதுகாப்புக்குட்பட்ட இடங்கள் எத்தனையோ அந்த மாளிகையில் உண்டு. அப்படி இருக்கும்போது ஊர் பேர் தெரியாத இந்தத் துறவிக்கு மாளிகையைச் சுற்றிக் காட்டுவது எப்படி முடியும் சுற்றிக் காட்டலாம் என்றே வைத்துக்கொண்டாலும் எவற்றைக் காட்டுவது? எவற்றை மறைப்பது? குழல்மொழி இரு தலைக்கொள்ளி எறும்பாகத் தவித்தாள்.

“நீ தயங்குவதைக் கண்டால் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஏதோ சில இடையூறுகள் இருப்பதாக அல்லவா தெரிகிறது? முடிந்தால் சுற்றிக் காட்டலாம். இல்லாவிட்டால் நான் வற்புறுத்தவில்லை” என்று தணிவான குரலில் மன்னிப்புக் கேட்டது போன்ற தொனியில் கூறினார் துறவி.

‘இடையூறுகளா ? அப்படி ஒன்றுமில்லை. இந்த மாளிகையைப் பொறுத்தவரையில் என்னுடைய தந்தை சில கட்டுப்பாடுகளும் வரையறைகளும் வைத்திருக்கிறார்...”

“என்ன கட்டுப்பாடுகளென்று நான் அறியலாமோ?”

“எல்லா இடங்களையும் எல்லோருக்கும் சுற்றிக் காட்டுவதில்லை! அரண்மனையில் இருப்பவர்களும் சரி, வந்து போகிற விருந்தினர்களும் சரி, இன்னார் இன்ன பகுதிகளில் தான் பழக வேண்டுமென்று கடுமையான கட்டுக்காவல் வைத்திருக்கிறார்.”

அவள் கூறியதைக் கேட்டுத் துறவி மறுமொழி கூறாமல் இலேசாகப் புன்முறுவல் செய்தார்.

“என்ன நீங்களாகவே சிரித்துக் கொள்ளுகிறீர்கள்?"