பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

17


நேர் வடக்கே செல்லும் சாலை புறத்தாய நாட்டுக் கோட்டை வழியே மதுரைக்கும், அதற்கப்பால் உறையூர், காஞ்சி முதலிய வடபால் நாட்டுத் தலை நகரங்களுக்கும் போவதற்குரிய மிக முக்கியமான இராஜபாட்டையாகும்.

கிழக்கே செல்லும் சாலை அழகிய பாண்டியபுரம், பூதப்பாண்டி, ஆரல்வாய் மொழி, கோட்டாறு முதலிய நாஞ்சில் நாட்டுக் கீழ்ப்பகுதி ஊர்களுக்குப் போவது.

மேற்கே செல்லும் சாலை, சரித்திர ஏடுகளில் இடந்தோறும் பொன் எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய பெருமையை உடையது. அதுவே காந்தளூர்ச்சாலை, கடற்கரை ஒரமாகவே மேற்கே சென்று தென் மேற்குக் கோடியிலுள்ள விழிளும் என்னும் துறைமுகத்தோடு முடிவடைகிறது அது. தென்பாண்டி நாட்டின் படையெடுப்புக்களுக்கும், வெற்றி தோல்விகளுக்கும் இந்த முப்பெரும் இராஜபாட்டைகள் எவ்வளவுக்கு எவ்வளவு காரணமாக இருந்திருக்கின்றன என்பதைக் கதைப் போக்கில் நேயர்கள் தெரிந்து கொள்வார்கள்.

மகாராணியாரைக் கோவில் வாயிலில் நிறுத்தி விட்டு நடுவே இந்தச் சாலைகளைப் பற்றிக் கூற நேர்ந்தற்குக் காரணம், கதையில் புதிதாகப் பிரவேசிக்கும் பெண்கள் இருவரும் முறையே கீழ்ப்புறத்துச் சாலையிலிருந்தும், மேல்புறத்துச் சாலையிலிருந்தும் பல்லக்குகளில் வந்து இறங்குவது தான்.

கோவிலுக்குள்ளே செல்வதற்கு இருந்த வானவன்மாதேவி, அதங்கோட்டாசிரியர் முதலியவர்கள் இருபுறத்துச் சாலைகளிலிருந்தும், பல்லக்குகள் வருவதைப் பார்த்துவிட்டுச் சற்றுத் தயங்கி நின்றனர்.

சிறிது தொலைவில் அந்தப் பல்லக்குகள் வந்து கொண்டிருக்கும்போதே அவைகளில் வருகிறவர்கள் யாராயிருக்கலாம் என்பதைப்பற்றி அதங்கோட்டாசிரியர் சொல்லிவிட்டார். “மகாராணி! என்னுடைய பெண் அநங்க விலாசினி தங்களைத் தரிசிப்பதற்காகக் காலையிலேயே