பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

பாண்டிமாதேவி / முதல் பாகம்


ஆபத்துதவிகளின் அடையாளம் அது. ஆபத்துதவிப் படையைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனும் அந்த மாதிரித் துணியை இடுப்புக் கச்சையாக அணிந்து கொள்வது வழக்கம்.

பட்டுத் துணியை மடித்து மறைத்து வைத்துக் கொண்டார், இடையாற்று மங்கலம் நம்பி, அவர் மனத்தில் பல விதமான சந்தேகங்கள் உண்டாயின.

“ஆபத்துதவிப் படைகளைச் சேர்ந்த யாவரும் இப்போது கோட்டாற்றிலுள்ள தென் திசைப் பெரும் படையின் குடியிருப்பில் அல்லவா தங்கியிருக்கிறார்கள்? அவர்களோ அல்லது அவர்களில் ஒருவனோ இப்போது இங்கே எப்படி வந்திருக்க முடியும்? திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவன் ஆபத்துதவிகளில் ஒருவன்தானோ? அல்லது என்றைக்காவது தென்னவன் ஆபத்துதவிகள் இங்கே அரண்மனைக்கு வந்திருந்தபோது நிலவறைக்கு அருகில் இதைத் தவறிப் போட்டு விட்டார்களா ? இந்தப் பொருள் நிலவறைக்கருகில் கிடந்ததனால் மட்டும் நாம் ஆபத்துதவிகளின்மேல் சந்தேகப் பட்டு விடுவதற்கில்லை. வேறு எவனாவது நம்முடைய பகைவர்களின் கையாளாகிய ஒற்றன் வந்து ஒட்டுக் கேட்டு விட்டுப் போயிருக்கலாம். நாம் இந்தத் துணி ஒன்றை மட்டும் சான்றாகக் கொண்டு யாரையும் குற்றவாளியாக முடிவு செய்து விடுவதற்கு இயலாது”-என்று சிந்தித்து முடிவு செய்து கொண்டார் மகாமண்டலேசுவரர்.

அவர் தூண் மறைவிலிருந்து மறுபடியும் மந்திராலோசனை மண்டபத்தின் நடுவில் வந்து நின்ற போது அவருடைய உத்தரவுப்படியே நிலவறைக் கதவை அடைத்து விட்டதாக வீரர்கள் வந்து கூறினார்கள்.

எல்லோருடைய கண்களும் அவருடைய முகத்தையே கூர்ந்து பர்ர்த்துக் கொண்டிருந்தன.

“சந்தேகப்பட்டுக் கொண்டே இந்த இடத்தில் கூட்டத்தை நடத்தக் கூடாது. அவசியமானால் நிலவறையைத் திறந்து தீபங்களோடு உள்ளே சென்று தேடிப்பார்த்து விடலாம். இந்த மந்திரலோசனை மண்டபத்தைச் சுற்றியும் வெளிப் பகுதிகளிலும் சந்தேகப்படத்தக்க புதிய மனிதர்கள் யாரும் இல்லை. என்று