பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

197


உறுதியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் கூற்றத்தலைவர் கூட்டத்தை இங்கே தொடங்குவது நன்றாயிராது” என்று தம் கருத்தைக் கூறினார் பவழக்கனிவாயர்.

ஏதோ கவலையில் ஆழ்ந்துபோய் அமர்ந்திருப்பவர் போல், தலைகுனிந்து ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தார் மகாராணி வானவன்மாதேவியார்.

“பவழக்கனிவாயர் கூறுவது சரியே! தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பைத் தரும் - என்று தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் கூறியிருப்பதைப் படிக்காதவர்கள் நம்மில் யாருமில்லை. தென்பாண்டி நாட்டு அரசியல் இரகசியங்களை அறிவதற்காக யார் யாரோ சூழ்ச்சி செய்கிறார்கள் போலிருக்கிறது. இல்லையானால் அந்தரங்க மந்திராலோசனைக் கூட்டம் நடைபெறும் இந்த இடத்தில் நமக்கு மிக அருகில் வந்து ஒளிந்திருக்கும் அளவுக்கு ஒரு மூன்றாவது மனிதனுக்குத் துணிவு ஏற்படுமா?” என்றார் பல்லாயிரங் காலத்துப் பயிர்போலச் சிறந்த தொன்மை வாய்ந்த அதங்கோட்டாசிரியர் குடும்பத்தில் பிறந்த ஆசிரியர். படிப்பின் பெருமிதமும் கலையின் எழிலும் ஒருங்கு தென்படும் அவருடைய ஒளி பொருந்திய முகமண்டலத்தில் இதைச் சொல்லும்போது கவலை இருள் சூழ்ந்திருந்தது.

“மகாராணியாரும், மகாமண்டலேசுவரரும் இங்கு வருவதற்கு முன் நாங்கள் இதே இடத்தில் நீண்ட நேரமாகப் பல செய்திகளையும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் திரைக்குப் பின்னால் யாரும் ஒளிந்திருந்ததாக எங்களுக்குத் தெரியவில்லையே” என்றார் கூற்றத் தலைவர்களுள் ஒருவராகிய கழற்கால் மாறனார்.

“ஒளிந்திருக்கவில்லை என்று நீங்களும் நானும் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? ஒரு வேளை, பேச்சில் கவனமாக இருந்த நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம். திரைக்குப் பின்னால் இருப்பதை இங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நாம் எப்படிக் கவனித்திருக்க முடியும்? நம் பேச்சையே தப்பி ஓடினவன் முழுவதும் கேட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு