பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

199


வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவின்நெடியோன் எனவும், மாகீர்த்தி எனவும் சிறப்புப் பெயர்கள் பூண்டிருந்தான் இம் மன்னன். தமிழ் மொழியின் முழு முதல் தனிநூலாகவும், இலக்கணக் களஞ்சியமாகவும் விளங்கும் தொல்காப்பியம், இவன் அவையில் பெரும் புலவராக விளங்கிய அதங்கோட்டாசிரியர் தலைமையில்தான் அரங்கேற்றம் பெற்றது. அதங்கோட்டாசிரியர் வழிமுறையினரான ஒவ்வொருவரும் பிற்காலத்தே பன்னூறாயிரம் ஆண்டுகள் அதே குடிப்பெயர்கொண்டு தமிழின் புகழ் பரவ வாழ்ந்திருக்கலாம். இந்தக் கதையில் வரும் அதங்கோட்டாசிரியர் பழைய அதங்கோட்டாசிரியரின் பிற்காலத் தலைமுறையினரில் ஒருவராக இருக்க வேண்டுமென்று கொண்டு இந்தக் கதைக்காகக் கற்பனை செய்யப்பட்ட பாத்திரமாவார்.

வடிம்பலம்ப நின்ற பாண்டியன் இந்தக் கதை நிகழும் காலத்தில் தென்பாண்டி நாட்டின் வற்றாத நீர் வளத்துக்குக் காரணமாக இருக்கும் பறளியாறு எனப்படும் பஃறுளியாற்றை முன்பு முதன்முதலாக வெட்டுவித்தான். கடல் தெய்வத்தை வழிபட்டுக்கொண்டாடும் முந்நீர் விழா என்ற விழாவை ஏற்படுத்தினான். தலைச்சங்கத்தின் இறுதியில் ஆண்ட பெரும் பேரரசனான இவன் காலத்துக்குப்பின், பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் குறிப்பிடத்தக்கவன்.

“இவர்கள் காலத்துக்குபின் கடைச்சங்க காலத்துக்கு முன்னுள்ள கால இடைவெளி பாண்டியர் வரலாற்றின் இருள் சூழந்த பகுதியாகும். கடைச் சங்கத்தின் முதல் பாண்டிய மன்னனாகிய முடத்திருமாறன் காலத்தில் குமரிமலைத் தொடரும், குமரியாறும், குமரி நாடும் - ஆகிய தென்பாண்டி நாட்டின் தென்கோடி நிலப்பரப்பு முழுவதும் கடல் கோளால் அழிந்தது. இனிய பெருங்கனவுபோல் அழகிய சுவைக் காவியம் போல், சிறந்து இலங்கிய கபாடபுரம் என்ற நகரத்தைக் கடல் விழுங்கிவிட்டது.

முடத்திருமாறனுக்குப் பின் பதினைந்து பாண்டிய அரசர்களின் வழிமுறைக்கும் அப்பால் இறுதி மன்னனாகிய