பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

பாண்டிமாதேவி / முதல் பாகம்


சிறையை அடைந்து விடலாம். தொலைவில் தென்படும் ஒவியம்போல் அவன் நடந்துகொண்டிருந்த சாலையிலிருந்து பார்க்கும்போது ஊர் மங்கலாகத் தெரிந்தது. எந்த ஊரையும் தொலைவிலிருந்து பார்க்கும் போது கோவிலும், கோபுரமும் வீடுகளும், மரங்களுமாக அதன் அழகே தனிக் கவர்ச்சி மிகுந்து தோன்றும். அருகில் நெருங்கி உள்ளே நுழைந்து விட்டால் அந்தக் கவர்ச்சி இருப்பதில்லை. உலகத்தில் எல்லா அழகுள்ள பொருள்களுமே இப்படித்தான். நுழைந்து பார்க்கும்போது கவலையும், துன்பமும், வேதனையும், வஞ்சனையும்தான் அவற்றுள் தெரிகின்றன.

ஊர் நெருங்க நெருங்கத் தளபதியின் மனத்தில் சிந்தனைகள் குறைந்து சொந்தக் கவலைகள் எழுந்தன. 'முன்சிறையில் எங்கே போய்த் தேடி யாரிடம் குதிரை கேட்பது? குதிரை கிடைத்தாலும் அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் இரவாகிவிடுமே: காலையிலிருந்து கற்றத் தலைவர் கூட்டத்தில் என்னென்ன முக்கியமான செய்திகளைப் பேசி முடிவு செய்தார்களோ? அவற்றையெல்லாம் நான் அருகிலிருந்து அறிந்துகொள்ள முடியாமல் கெடுத்து என்னை, இந்தக் குட்டையன் ஏமாற்றிவிட்டானே? இனி நான் இரவில் அரண்மனைக்குப் போனாலும் அந்தரங்கக் கூட்டத்தில் நடந்தது பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்பதும் இயலாது. என்ன நடக்கிறதோ பார்க்கலாம்' எண்ணத்தில் அவநம்பிக்கை கலந்திருந்தாலும் வல்லாள தேவனுக்கு அதனிடையே ஒரு சிறு நம்பிக்கையும் இருந்தது. "வைகறையிலேயே ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதன் தன் கூட்டத்தோடு அரண்மனைக்குச் சென்றிருப்பதனால் அவன் மூலமாக ஏதாவது நடந்த செய்திகள், பேசப்பட்ட விவரங்கள், குறிப்பாகவோ வெளிப்படையாகவோ தெரியலாம் என நம்பினான் தளபதி, மந்திராலோசனைக் கூட்டம் நடக்கிற இடத்தில் எல்லோரையும் உடனே இருக்கவிடமாட்டார்கள். ஆனால் குழைக்காதன் குறிப்புத் தெரிந்தவன். சமயத்துக்கேற்றாற்போல் சாமர்த்தியமாக நடந்துகொள்ள அவனுக்குத் தெரியும்” என்று எண்ணித் தற்காலிகமாகத் திருப்தியடைந்தான் தளபதி.