பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

பாண்டிமாதேவி / முதல் பாகம்


அரண்மனையைச் சேர்ந்த வேறு இரு காவலர்கள் இருப்பதுண்டு. அவர்கள், “காலையிலிருந்து அரண்மனையில் கூற்றத் தலைவர்களின் அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. உள்ளே யாரையும் விடுவதற்கு அனுமதி இல்லை” என்று சொல்லி நாராயணன் சேந்தனைத் தடுத்துவிட்டனர். தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகிவிட்டது. ஆபத்துதவிகள் அந்த மட்டில் விட்டார்களே! என்று மகிழ்ச்சியோடு உள்ளே நுழையப்போக இவர்கள் தடுத்துவிட்டார்களே! என்று தயங்கி நின்றான் சேந்தன்.

“காவல் வீரர்களே ! உங்கள் கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போது யாரையும் உள்ளே விடக்கூடாது என்று கட்டுப்பாடு நல்லதுதான். ஆனால் எல்லோரையும் அதற்காகத் தராதரம் பார்க்காமல் தடுத்து நிறுத்திவிடலாமா? நான் இப்போது உடனே மகாமண்டலேசுவரரைச் சந்தித்து ஓர் அவசரச் செய்தியைக் கூறியாகவேண்டுமே! என்னை நீங்கள் இப்படித் தடுத்தால் நான் என்ன செய்வது? உங்களிடம் வாதாடிக்கொண்டிருக்காமல் நான் திரும்பிப் போய் விட்டாலோ, என்னை உள்ளேவிட மறுத்த குற்றத்துக்காக நீங்கள்தான் பிறகு மகாமண்டலேசுவரரிடம் திட்டுக் கேட்க நேரிடும். எனக்கென்ன வந்தது? நான் பேசாமல் இப்போதே திரும்பிப் போய்விடுகிறேன்” என்று நாராயணன் சேந்தன் நயத்துடனும், பயமுறுத்தல் போலவும் பேசி உடனே திரும்பிப் போய் விடுகிறவனைப் போல் நடித்தான்.

அவனுடைய தந்திரமான பேச்சும், நடிப்பும் நல்ல பயனை அளித்தன.

“ஐயா! இருங்கள். போய்விடாதீர்கள். எங்களுக்கு எதற்கு வம்பு? உங்கள் பெயரைச் சொல்லுங்கள், உள்ளே போய் மகாமண்டலேசுவரிடமே சொல்லி அனுமதிபெற்று வந்துவிடுகிறேன். அதுவரையில் இப்படி நில்லுங்கள்” என்றான் காவலர்களில் ஒருவன். உடனே நாராயணன் சேந்தன் மகாமண்டலேசுவரரின் பெயரைக் கூறியதும் காவலன் அடைந்த பரபரப்பைக் கண்டு சிரித்துக்கொண்டே தன் பெயரைக் கூறினான். காவலன் அதைக் கேட்டுக் கொண்டு உள்ளே சென்றான்.