பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“அதெல்லாம் சரிதான். சேந்தா! இப்போது வேறொரு திறமையான செயலை உன் கைகளில் ஒப்படைக்கப்போகிறேன். மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறமுள்ள நிலவறையின் கதவை வெளிப்புறமாக அடைத்துத் தாழ் போடச் செய்திருக்கிறேன். நீதான் நிலவறைக்குள் போய் அங்கு ஒளிந்திருப்பவனை யாருக்கும் தெரியாமல் வெளியே இழுத்துக்கொண்டு வரவேண்டும். என்ன சொல்கிறாய்? உன்னால் முடியுமா? முடியாதா?” என்று மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் அவர்.

'ஐயோ! நான் மட்டும் தனியாகவா?' என்ற சொற்கள் சேந்தனுடைய நாக்கு நுனிவரை வந்து விட்டன. அவரிடம் தனக்கிருந்த பயம், மரியாதைகளை எண்ணி அவற்றைக் கூறிவிடாமல் ஆகட்டும் என்பதுபோல் தலையை ஆட்டினான்.

"போ! முதலில் அதைக் கவனி! வேறு யாரையும் உன்னோடு துணைக்குக் கூப்பிடாதே! நீ மட்டும் தனியாகவே போ!" என்று துரத்தினார் மகாமண்டலேசுவரர்.

“சுவாமி ! இன்னொரு இரகசியம்; உங்களிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்” என்றான் சேந்தன்.

“என்ன? சொல்லேன் ?”

“அரண்மனையில் ஆபத்துதவிகள் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?”

“அது எனக்கு முன்பே தெரியும் ! நீ போய் உன் காரியத்தைப் பார்.”

சேந்தன் நிலவறையை நோக்கிப் புறப்பட்டான். இருட்குகையாக, அந்தகாரக் களஞ்சியமாக இருக்கும் நிலவறையில் தனியாக நுழைய வேண்டுமென்பதை நினைத்தபோதே துணிவு மிகுந்தவனான நாராயணன் சேந்தனுக்கு பாதாதிகேச பரியந்தம் நடுங்கியது. ஒரு நாழிகை இரண்டு நாழிகையில் சுற்றித் தேடித் பார்த்துவிடக்கூடிய நிலவறையா அது, விடிய விடியத் தேடினாலும் அங்கு ஆள் ஒளிந்துகொண்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியாதே! வேறு