பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

213


பாய்ந்தான். பிறந்த மேனியராய்ப் பல கன்னிப்பெண்கள் இருளில் நின்று கொண்டு இருப்பது போல் அவனைச் சுற்றிலும் அவன் உயரத்துக்குச் சரியாகச் சிலைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளாமல் இருட்டில் பார்த்து நடக்கவேண்டியிருந்தது. அவன் முன்னால் நடக்க, நடக்க அந்தச் சிரிப்பொலியும் அவனைவிட்டுத் தள்ளிச் சென்றுகொண்டே இருந்தது. திடீரென்று ஒரு பெரிய வெளவால் வேகமாகப் பறந்து வந்து சேந்தன் முகத்தில் மோதியது. அப்போது சேந்தனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் யாரோ முகத்தில் ஓங்கி அடித்து விட்ட மாதிரி இருந்தது. கையிலிருந்த ஒரே ஒரு பாதுகாப்புக் கருவியான வாளும் சிலையில் மோதி முறிந்துவிட்டது.

உயிரின் மேலுள்ள இயற்கையான ஆசையும், பயமும் சேந்தனைக் கட்டுப்படுத்தி நிறுத்தின. சுவரில் வரிசையாகக் கட்டப்பட்டுத் தொங்கும் வாள்களின் வரிசையிலிருந்து ஒன்றை உருவிக் கையில் எடுத்துக்கொண்டு அப்புறம் அந்த நிலவறை முழுவதும் சுற்றலாமென்று எண்ணினான் அவன். பயம் அந்த முன்னெச்சரிக்கையை அவன் மனத்தில் எழுப்பி விட்டிருந்தது.

பதற்றமும் அவசரமும் உந்தித் தள்ளச் சுவர் அருகில் சென்று ஒரு வாளின் நுனியைப் பிடித்து இழுத்தான். அது மேற்புறம் நன்றாக இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததால் அவ்வளவு இலேசாக அவன் இழுத்த மாத்திரத்தில் கைக்கு வந்துவிடவில்லை. எனவே பக்கத்தில் சென்று இரண்டு கைகளாலும் பலங்கொண்ட மட்டும் அதைப் பிடித்து இழுத்தான். அடுத்த விநாடி நூற்றுக்கணக்கான வெண்கல மணிகளை ஒரே சமயத்தில் யாரோ தாறுமாறாக அடித்தது போன்று ஓர் ஒளிக் குழப்பம் அங்கு உண்டரயிற்று. மடமடவென்று சுவரிலிருந்த அத்தனை வாள்களும், கேடயங்களும் சரிந்து உதிர்ந்தன. நாராயணன் சேந்தன் பின்னுக்கு விலகி நின்று கொண்டான். அவன் எதிர்பாராதது நடந்துவிட்டது. அந்தச் சுவரில் கட்டப்பட்டிருந்த எல்லா வாள்களும் ஒருகோடியிலிருந்து மற்றொரு கோடிவரை ஒரே