பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

219


“பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? ஊழி ஊழியாகப் பொதியமலைத் தென்றலையும் முதிய தமிழ்ப் புலமையையும் போற்றிப் பாராட்டி அசைந்த முடி எதுவோ அது இப்போது இந்த நான்குமுழ நீளமுள்ள தந்தப் பேழைக்குள் அடங்கி விட்டதே!” என்று இரங்கிய குரலில் கூறிக்கொண்டே பிறகு அருகில் நெருங்கி அந்தப் பேழையைத் திறந்தான் அவன். உள்ளிருந்து ஒரு நட்சத்திர மண்டலமே எட்டிப் பார்ப்பதுபோல் ஒளிக்கீற்றுக்கள் பாய்ந்தன. மஞ்சள் நிறப் பட்டு விரிப்பின்மேல் அந்த மின்னல் முடி வெண்ணிலா விரித்தது. அதனருகே பேழையின் நீளத்துக்குச் சரியாக வைரக் கற்களும், வெண் முத்துக்களும், விரவிப்பதித்த உறைக்குள் வீரவாள் ஒன்று மறைந்து கொண்டிருந்தது.

“மகாமன்னரான என் தந்தைக்குப் பின்னர் இந்த ஒளி முடியும், வீரவாளும் இப்படியே பேழையில் உறங்கவேண்டியது தானா? இவற்றைப் பேழைக்குள் பார்க்கும்போது கண்ணின் நடுமையத்துக் கருவிழிகளைக் கூச வைக்கும் இந்த ஒளியைப் பார்க்கும்போது என் உள்ளம் ஏன் இப்படிப் பொங்கி மேலெழுகிறது? உணர்ச்சிகளில் ஏன் புதிய வேகம் உண்டாகிறது? வெறும் முடியும், வாளும் மட்டுமா இதற்குள் அடைப்பட்டிருக்கின்றன? என் கண்களுக்கு இவை வேறொரு விதமாகவும் தோன்றுகின்றனவே! என் தந்தையின் தலைமுறைக்குப் பாண்டியப் பேரரசின் புகழும், வீரமுமே இப்படிச் சிறைப்பட்டு விட்டனவா?” அவனுடைய உள்ளத்தில் அலை அலையாகச் சிந்தனைகள் எழுந்தன.”

இரண்டு கைகளாலும் அவற்றைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான். குழல்மொழி எதுவும் பேசத் தோன்றாமல் மருண்ட விழிகளால் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள். அவன் பேழையை மூடிவிட்டுக் கடுமையான காவலுக்கு உட்பட்ட அந்தச் சிறிய அறையைச் சுற்றிலும் தன்னுடைய விழிகளைச் சுழற்றினான்.

பின்பு, “போகலாம் வா” என்று குழல்மொழியையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான். யவன வீரர்கள்