பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

பாண்டிமாதேவி / முதல் பாகம்


சேந்தன் அதோடு பேச்சை விடவில்லை. மேலும் தொடர்ந்தான். “உங்கள் திருமேனியில் தென்படும் விழுப்புண் (காயங்கள்) களையும், கிழிசல்களையும் பார்த்தால் யாருடனோ போரிட்டுவிட்டு வந்திருப்பதுபோல் தோன்றுகிறதே?”

“அப்பனே! என் உடம்பைப்பற்றிச் சொல்ல வந்து விட்டாய். உன்னையே கொஞ்சம் நிதானமாகப் பார்த்துக் கொள். நீ எப்படியிருக்கிறாய் என்பது தெரியவரும்.” எதையோ மறைத்துக்கொண்டு சிரிக்கிறாற் போன்ற அந்த மர்மச் சிரிப்பு; அது ஆபத்துதவிகள் படைத்தலைவனுக்கே உரியது போலும். பேச்சின் இறுதியில் கடைசி வார்த்தையும் அவன் வாயிலிருந்து வெளிவந்து முடிந்தபின் அந்தச் சிரிப்பு மலர்ந்தது. குழைக்காதன் கூறிய பின்புதான் சேந்தன் தன் தோற்றத்தைத் தானே பார்த்துக் கொண்டான். ஏறக்குறையத் தன் நில்ையும் அதேபோல் இருந்ததைச் சேந்தன் அப்போதுதான் உணர்ந்தான். “அடடே! இந்தத் தோற்றத்தோடு மகாமண்டலேசுவரரைப் பார்ப்பதற்கு வேறு கிளம்பி விட்டேனே! நல்லவேளை, இவன் இதைக் கண்டு சொல்லியிராவிட்டால் இப்படியே போய் அவருக்கு முன்னால் நின்றிருப்பேன்" என்று எண்ணியவனாய் மகர நெடுங்குழைக்காதனிடம் விடைபெற்றுக் கொண்டு உடைமாற்றி வருவதற்குக் கிளம்பினான்.

நாராயணன் சேந்தனின் தலைமறைந்ததோ இல்லையோ அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன்போல் பட்டி மண்டபத்துக்குள் நுழைந்து மந்திராலோசனைக் கூட்டம் நடந்த இடத்தில் எதையோ தேடினான் ஆபத்துதவிகள் தலைவன். அங்கே அவன் தேடிய பொருள். எதுவோ அது கைக்குக் கிடைப்பதற்கு அதிக நேரம் ஆகவில்லை. அவன் எடுத்துக்கொண்டு போவதற்காகவே அங்கு வைக்கப் பட்டிருந்ததுபோல் சுலபமாகக் கிடைத்துவிட்டது.

பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் மந்திரர்லோசனைக் கூட்டம் நடந்த போது மகா மண்டலேசுவரர் எந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாரோ, அதன் கீழே தான் அந்தப் பொருள் அவனுக்குக் கிடைத்தது. அது வேறொன்றுமில்லை,