பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234

பாண்டிமாதேவி / முதல் பாகம்


மகாமண்டலேசுவரருடைய இந்தப் பேச்சில் அதங்கோட்டாசிரியர் மறுபடியும் குறுக்கிட்டார்.

"மகாமண்டலேசுவரரை யாரும் வற்புறுத்தவோ, அவசரப்படுத்தவோ விரும்பவில்லை. நான்கு நாட்களில் தேடிக் கொண்டு வர வேண்டுமென்று அவசரப்பட்டுத் துன்ப முற வேண்டாம். வேண்டிய நாட்களை எடுத்துக் கொண்டு பதறாமல் தேடிப் பார்க்கலாமே!”--என்றார் ஆசிரியர் பிரான்.

“தேவையில்லை! நான்கு நாட்களே அதிகம். விரும்பினால் நான்கு நாழிகைக்குள் இளவரசரை அழைத்துவர என்னால் முடியும்"-- என்று முகத்தில் அடித்தாற்போல் அதங்கோட்டாசிரியருக்குப் பதில் சொல்லி விட்டார் இடையாற்று மங்கலம் நம்பி.

“முடிந்தால் செய்யுங்கள்!” என்று படித்தவருக்கே உரிய அடக்கத்தோடு பேச்சை முடித்துவிட்டார் ஆசிரியர், ‘ஏனடா, இந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தோம் என்று ஆகிவிட்டது அவருக்கு தம் மேல் மகா மண்டலேசுவரருக்கு உள்ளுறச் சிறிது கோபம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவருடைய பேச்சிலிருந்தே அதங்கோட்டாசிரியர் புரிந்து கொண்டார்.

இளவரசர் அரண்மனைக்கு அழைத்துக்கொண்டு வரப்பட்டதும் மற்றொரு கூற்றத் தலைவர் கூட்டம் நடத்துவ தென்றும், அதில் மற்ற விஷயங்களைப் பேசி முடிவு செய்து கொள்ளுவதென்றும் தீர்மானித்த பின் அன்றையக் கூட்டம் அதோடு முடிந்து விட்டது.

பட்டி மண்டபத்தில் கூட்டம் நடந்துகொண்டிருந்த போது நாராயணன் சேந்தன் வந்ததும், மகாமண்டலேசுவரர் அவனை இரகசியமாக நிலவறைக்கு அனுப்பியதும் நேயர்களுக்கு நினைவிருக்கலாம். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் அவரவர்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதிகளுக்குச் சென்றுவிட்டனர். மகாமண்டலேசுவரர் மட்டும் தாம் நிலவறைக்கு அனுப்பியிருந்த சேந்தன் திரும்பி வருவானென்று எதிர்பார்த்துச் சிறிது நேரம் அங்கே தாமதித்தார். இடையே மற்றொரு காரியத்தையும் அங்கிருந்தவாறே முடித்துக்