பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

236

பாண்டிமாதேவி / முதல் பாகம்



முடிந்தது. கூடிய வரையில் தான் அங்கே நின்று கண்காணிப்பது கண்காணிக்கப்படுகிறவருக்குத் தெரியாமல் இருக்க வேண்டுமென்று அவள் நினைந்திருந்தாள். ஆனால் அவள் குனிந்து பார்த்தபோது அவளுடைய தலையில் அணிந்திருந்த குடை மல்லிகைப் பூக்கள் அவளைக் காட்டிக்கொடுத்து விட்டன. அந்தப் பாழாய்போன பூக்கள் கீழே உதிர்ந்து அவள் எண்ணத்தில் கலக்கத்தை உண்டாக்காமல் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?

புவன மோகினி உடனே ஒடிப்போய் இடையாற்று மங்கலம் நம்பியிடம் செய்தியைத் தெரிவித்துவிட்டு வந்திருந்தாலும் அவள் மனத்தில் பயம் ஏற்பட்டது. ஆபத்துதவிகள் தலைவனின் நெருப்புப் போன்ற விழிகளும், குரூரமான முகமும் அடிக்கடி தோன்றி அவளைப் பயமுறுத்தின. 'மகரநெடுங்குழைக்காதன் தான் அவளை மேலேயிருந்து கண்காணித்தபோது தன்னைப் பார்த்திருப்பானோ?' என்ற பயத்தினால் அன்றிரவு தூக்கமே அவளை அணுகுவதற்கு மறுத்தது. பழி பாவத்துக்கு அஞ்சாதவன், ஈரமற்றவன், கல்மனமுடையவன் என்று ஆபத்துதவிகள் தலைவனைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்த செய்திகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து அவளை மிரட்டிக் கொண்டிருந்தன.

'புவனமோகினி'--ஆபத்துதவிகள் தலைவனை எண்ணி நடுங்கி உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் நாராயணன் சேந்தன் தளபதி வல்லாளதேவனை எண்ணி உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்தான்.

‘ஐயோ! நான் தளபதியிடம் சிக்கி அடிபட வேண்டுமென்றுதான் என் தலையில் எழுதியிருக்கிறது போலும். இவ்வளவு தூரம் ஏமாற்றித் திருநந்திக்கரை வரையில் இழுத்தடித்தும் எவன் குதிரையிலோ இரவல் இடம் பிடித்து அரண்மனைக்கு வந்துவிட்டானே. அவனோடு போகாமல் யாரோ ஒரு தூதனையும் அல்லவா அழைத்துக்கொண்டு வந்திருக்கிறான்? என்ன ஆகப் போகிறதோ?' என்று கவலை கொண்டு தூக்கம் இழந்தான் சேந்தன்.