பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

237


அந்தப்புரத்து மேல் மாடத்திலிருந்து தன் மேல் உதிர்ந்த பூக்களை வைத்துக்கொண்டு தன்னைக் கண்காணித்த பெண் புலி யாரென்று தூக்கமுமில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தான் குழைக்காதன். முதல் முதலாகக் கூற்றத் தலைவர் கூட்டத்தில் என் பேச்சு எடுபடாமல் தோற்றுப் போய்விட்டதே! என்று மனம் புழுங்கிக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். அன்று நள்ளிரவு வரையில் இவர்கள் நால்வரும் உறங்கவே இல்லை.


29. கொள்ளையோ கொள்ளை !

இராசசிம்மன் அப்படி நடந்துகொண்டது குழல் மொழிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அக்கரையிலிருந்து படகில் வருபவர் யாராக இருந்தால்தான் என்ன! எவ்வளவு அவசரமாக இருந்தால்தான் என்ன? அதற்காக ஒரு பெண்ணிடம் தனிமையில் மனம்விட்டுப் பேசிக் கொண்டிருந்தவர் இப்படியா முகத்தை முறித்துக்கொண்டு போவதுபோல் திடீரென்று போவார்?’ என்று எண்ணி நொந்து கொண்டாள். வந்தவர்களோடு விரைவில் பேசி முடித்து அனுப்பிவிட்டுத் திரும்பி வந்துவிடுவார் என்று நிலா முற்றத்துத் திறந்த வெளியிலேயே அவள் இராசசிம்மனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரமாகியும் அவன் திரும்பி வராமற்போகவே அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. கீழே இறங்கி வந்துவிட்டாள்.

அவள் கீழே இறங்கி வந்த சமயத்தில் படகோட்டி அம்பலவன் வேளான் வசந்த மண்டபத்துப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தான். முதலில் படகில் வந்தவர்களை அழைத்துக் கொண்டு இராசசிம்மன் முன்பே வசந்த மண்டபத்தில் தான் தங்கியிருந்த இடத்துக்குப் போயிருக்க வேண்டுமென்று குழல்மொழி அனுமானித்து உணர்ந்து கொண்டாள்.

‘வந்திருப்பவர்கள் யார்? என்ன காரியத்துக்காக் வந்திருக்கிறார்கள்?’ என்று அவனிடம் கேட்கலாம் என்று