பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240

பாண்டிமாதேவி / முதல் பாகம்


அங்கிருந்த நிலைமையக் கண்டு திகைத்துப் போனாள். வசந்த மண்டபம் இருண்டு கிடந்தது. அங்கே எவருடைய பேச்சுக் குரலும் கேட்கவில்லை. இருளும், தனிமையும் ஆட்சி புரிந்த அந்த இடத்தில் நிற்பதே பயமாக இருந்தது தோழிக்கு. அவள் வசந்த மண்டபத்தின் எல்லாப் பகுதிகளையும் நன்றாகச் சுற்றிப் பார்க்காமல் முகப்பிலேயே பயந்து கொண்டு திரும்பி விட்டாள். வசந்த மண்டபத்தின் பின்புறமிருந்த தோட்டத்துக்குள் சென்று பார்த்திருந்தால் ஒரு சிறிய தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் துறவியும், அவரைத் தேடிவந்தவர்களும், ஏதோ சதிக்கூட்டம் நடத்துகிறவர்களைப் போல் அந்தரங்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை அவள் பார்த்திருக்கலாம். ஆனால் அந்தத் தோழிக்குத்தான் அவ்வளவுக்குப் பொறுமையில்லாமல் போய்விட்டதே!

“அம்மா! துறவியையும் அவரோடு வந்திருந்தவர்களையும் வசந்த மண்டபத்தில் காணவில்லை” என்று குழல்மொழியிடம் திரும்பிவந்து சொல்லிவிட்டாள் அந்தத் தோழி.

"வசந்த மண்டபத்துக்குப் போகிற பாதையின் தொடக்கத்தில் அம்பலவன் வேளான் காவலுக்கு உட்கார்ந்திருப்பானே? அவனைக்கூடவா காணவில்லை!”

“ஆம்! அவனையும் காணவில்லை!”

“சரிதான், படகில் அக்கரைக்குப் போயிருப்பார்கள். அடிகளுக்குத் திடீரென்று சுசீந்திரத்துக்குப் போய்த் தாணுமாலய விண்ணகரத்தில் தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆசை உண்டாகியிருக்கும். நமக்கென்ன வந்தது? எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நாம் தூங்கலாம்” என்று சுவாரஸ்யமில்லாமல் பேசினாள் குழல்மொழி.

அதன்பின் அடிகள் உணவு கொள்ள வரவில்லையே என்று அங்கு யாரும் அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. இரவு பத்துப் பதினொரு நாழிகைக் கெல்லாம் இடையாற்று மங்கலம் மாளிகையில் பூரண அமைதி நிலவியது. மகாமண்டலேசுவரரின் செல்வப் புதல்வியும், மாளிகையிலிருந்த மற்றப் பணிப் பெண்களும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த கன்னிமாடப்பகுதிக்குப் போய் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர்.