பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

245


படுத்துக்கொண்ட பின்பே படுக்கையில் படுத்தாள். இங்கே இது நடந்த நேரத்தில்தான் இடையாற்று மங்கலத்து மாளிகையில் அந்தப் பயங்கரக் கொள்ளையும் நடந்திருக்கிறது. ஒரே இரவில் ஒரே நேரத்தில் இரண்டு குழப்பங்கள் நடந்துவிட்டன.

மறுநாள் பொழுது புலர்ந்தபோது தென்பாண்டி நாட்டின் அரசியல் வாழ்வுக்கு அதிர்ச்சி தரும் உண்மைகளும் வந்து சேர்ந்தன. மகா மண்டலேசுவரர் கண் விழித்து எழுந்தவுடன் கரவந்தபுரத்திலிருந்து வந்திருந்த தூதனை அவருக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினான் தளபதி வல்லாளதேவன். அதற்கு முன்பே முதல் நள்ளிரவு புவனமோகினியின் பள்ளியறையில் நடந்த கலவரம் அவர் காதுக்கு எட்டியிருந்தது. கரவந்தபுரத்துத் தூதன் தான் கொண்டு வந்திருந்த முத்திரையிட்டு ஜாக்கிரதையாகப் பத்திரப்படுத்திய ஒலையை மகாமண்டலேசுவரரிடம் கொடுத்தான்.

அவசர அவசரமாக அதன் மேலிருந்த அரக்கு முத்திரைகளைக் கலைத்து உதிர்த்துவிட்டு ஒலையைப் பிரித்துப் படித்தனர்.

“தென் பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரர் திருச்சமூகத்துக்குக் கரவந்தபுரத்து உக்கிரன் கோட்டைக் குறுநிலவேள் பெரும்பெயர்ச்சாத்தன் பல வணக்கங்களுடன் அவசரமாய் எழுதும் திருமுகம்:

“வடபாண்டி நாட்டு மதுரை மண்டலம் முழுதும் வென்று கைப்பற்றியதோடு ஆசை தணியாமல் கோப்பரகேசரி பராந்தக சோழன் தென்பாண்டி நாட்டின்மீதும் தக்கவர்களின் படைத்துணையோடு படையெடுக்கக் கருதியுள்ளான். இந்தப் படையெடுப்பு நாம் எதிர்பாராமலிருக்கும் போது மிக விரைவில் திடீரென்று நம்மேல் நிகழும் என்று தெரிகிறது. சில நாட்களாக இங்கே உக்கிரன் கோட்டையிலும், இதைச் சுற்றியுள்ள இடங்களிலும் சோழ மண்டலத்து ஒற்றர்களும், உளவறிவோரும் இரகசியமாக உலாவக் காண்கிறேன். மிக விரைவில் வடதிசை மன்னர் படையெடுப்பால்-நாம் தாக்கப்படுவோம்