பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/250

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

248

பாண்டிமாதேவி / முதல் பாகம்



“சேந்தன் அசட்டுத்தனமாக எதையாவது செய்திருப்பான். அதையெல்லாம் மனத்தில் வைத்துக் கொள்ளாதே, தளபதி!” அவனைச் சமாதானப்படுத்தித் தழுவிக் கொள்கிறவர்போல் குழைந்து பேசினார் இடையாற்று மங்கலம் நம்பி.

“ஓகோ! அசட்டுத்தனத்தைக்கூடத் திட்டமிட்டுக் கொண்டு செய்வதுதான் தங்களுக்கும், தங்கள் ஒற்றனுக்கும் வழக்கம் போலிருக்கிறது. இன்றுதான் எனக்கு உங்களைச் சரியாகப் புரிகிறது” என்று சுடச்சுடப் பதில் கொடுத்தான் தளபதி. அதற்கு மேலும் அவரை வம்புக்கு இழுக்க வேண்டுமென்று அவன் ஆத்திரம் அவனைத் தூண்டியது. மகாராணியாரின் முன்னிலையில் அப்படிச் செய்வது மரியாதைக் குறைவாகப் போய்விடும் என்று அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்து விட்டான். 'தளபதியும், மண்டலேசுவரரும். பேசிக் கொண்ட விதத்தைக் கவனித்ததில் அவர்களுக்குள் ஏதோ பிணக்கு இருக்கிறது' என்ற குறிப்பு மட்டும் மகாராணியாருக்குப் புரிந்தது. ‘அது என்ன பிணக்கு?' என்பதை அவர்களிடமே வற்புறுத்தித்தூண்டிக் கேட்க விருப்பமில்லை அவருக்கு. “மகாமண்டலேசுவரரே! இன்னும் எதைச் சிந்தித்துக்கொண்டு நேரத்தைக் கழிக்கிறீர்கள்? தூதன் காத்துக்கொண்டிருக்கிறான். அவனுக்குப் பதில் ஓலை கொடுத்து அனுப்பி வையுங்கள். உடனே இடையாற்று மங்கலம் சென்று வடதிசை மன்னர் படையெடுப்பு விவரங்களைக் கூறிக் குமாரபாண்டியனை இங்கே அழைத்து வாருங்கள். இன்று இரவிலேயே மறுபடியும் கூற்றத் தலைவர்களைக் கூட்டி இளவரசனையும் உடன் வைத்துக் கொண்டு கலந்து ஆலோசிப்போம். உடனே புறப்படுங்கள். தாமதத்துக்கு இது நேரமில்லை” என்று வானவன்மாதேவியார் அவரைத் துரிதப்படுத்தினார்.

“தளபதி, உனக்கும், எனக்கும், உன்னுடைய ஒற்றனுக்கும், ஒருவரையொருவர் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணமாக எத்தனையோ உட்பகைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் இந்தச் சமயத்தில் நாம் மறந்துவிடவேண்டும்" என்று அவனிடம் கெஞ்சுவது போல் கூறினார் இடையாற்று மங்கலம் நம்பி.