பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

பாண்டிமாதேவி / முதல் பாகம்


“சக்கசேனாபதி! இந்நேரத்துக்குள் செய்தி தென்பாண்டி நாடு முழுவதும் பரவியிருக்கும். அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்துக்காகப் போய் தங்கியிருக்கும் மகா மண்டலேசுவரருக்கு இடையாற்று மங்கலத்திலிருந்து கொள்ளை போன தகவல் கூறி அனுப்பப்பட்டிருக்கும்.” தன்னோடு கப்பலிலிருந்து இறங்கியவர்களின் மூத்தவரும், வீர கம்பீரம் துலங்கும் தோற்றத்தை உடையவருமான ஒருவரைப் பார்த்து இராசசிம்மன் நகைத்துக்கொண்டே இவ்வாறு கூறினான்.

“இளவரசே! திருடினவர்கள் திருட்டுக் கொடுத்தவர்களுக்காக அனுதாபப்படுவது உண்டோ?” என்றார் சக்கசேனாபதி.

“சக்கசேனாபதி! இந்த இடத்தில் பயன்படுத்தத் தகுதியற்ற ஒரு வார்த்தையை நீங்கள் பயன்படுத்திவிட்டீர்கள். யார் திருடினவன்? எவர்கள் திருட்டுக் கொடுத்தவர்கள்? என்றோ ஒருநாள் என் தலையில் சூட்டிக் கொள்ளப்போகிற முடியையும், இடையில் அணிபெறவேண்டிய வாளையும் இன்றே பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் மறைத்து வைக்கிறேன். பொருளுக்கு உரியவர்கள் பொருளை எடுத்துச் சென்று பத்திரப்படுத்துவதைத் திருட்டு என்று கூறக் கூடாது.”

சக்கசேனாபதி சிரித்தார். கம்பீரமான் ஆண் சிங்கம் போன்ற அவருடைய முகத்தோற்றத்திலும், பார்வையிலும் ஒருவித மிடுக்கு இருந்தது. அவர் முகத்தைப் பார்க்கும்போது பிடரி மயிரோடு கூடிய ஓர் ஆண் சிங்கத்தின் நிமிர்ந்த பார்வை நினைவுக்கு வராமற்போகாது. வீரத்தின் மதர்ப்பும் ஆண்மையும் விளங்கும், பருத்த, உயர்ந்த தோற்றம் அவருடையது. இந்தக் கதையின் மேற்பகுதிகளில் இன்றியமையாத சில நிகழ்ச்சிகளுக்கும், மாறுதல்களுக்கும் காரணமாக இருக்கப்போகிறவர் சக்கசேனாபதி.

அவர் ஈழ மண்டலப் பேரரசின் மகா சேனாபதி. குமார பாண்டியனின் உற்ற நண்பரும் இலங்கைத் தீவின் புகழ்மிக்க வேந்தருமாகிய காசிய மன்னரின் படைத் தலைவர். தந்தை காலஞ்சென்ற நாளிலிருந்து இராசசிம்மனின் இளமைக் காலத்தில் அவனுக்கு எத்தனையோ முறை கடல் கடந்து