பக்கம்:பாண்டிமாதேவி (நாவல்).pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

பாண்டிமாதேவி / முதல் பாகம்

உணவு முடிந்ததும் அன்று பகல் முழுதும் இராசசிம்மனும், சக்கசேனாபதியும் கூடாரத்தில் ஒய்வு பெற்று நிம்மதியாக உறங்கினர்.

கதிரவன் மலைவாயில் விழுகிற நேரத்துக்குக் குமார பாண்டியனும், சக்கசேனாபதியும் அந்த அழகிய தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டனர். உடனிருந்த ஆட்கள் கப்பலுக்கும் கூடாரத்துக்கும் காவலாக இருந்தனர். மாலை நேரத்தில் அந்தத் தீவின் அழகு பன்மடங்கு மிகுதியாகத் தோன்றியது. வானப் பரப்பு முழுவதும் குங்குமக் குழம்பும், கீழே கடலில் மிதக்கும் பசுமைக் கனவு போல் அந்தத் தீவு இருந்தது.

விந்தையும் விநோதமும் பொருந்திய கடல்படு பொருள்களான சங்கு, முத்து, சிப்பிகள், சலங்கைகள், பல நிறம் பொருந்திய கடற்பாசிக் கொத்துகள் இவற்றையெல்லாம் குவியல் குவியலாகக் குவித்து விற்கும் தீவின் கடைவீதிக்குள் அவர்கள் நுழைந்தார்கள்.

சக்கசேனாபதியையும் அழைத்துக் கொண்டு அந்தக் கடைகளில் ஒன்றை நெருங்கினான் தென்பாண்டி நாட்டு இளவரசன் இராசசிம்மன்.

வனப்பும், வாளிப்பும் நிறைந்த உடலோடு சிரிப்பும் மலர்ச்சியும் கொஞ்சும் முகத்தையுடைய இளம் பெண் ஒருத்தி அந்தக் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். முற்றிலும் கடலில் கிடைக்கும் அலங்காரப் பொருள்களாலேயே அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். கழுத்தில் முத்து மாலை, செவிகளில் முத்துக் குண்டலம், நெற்றியில் முத்துச் சுட்டி கைகளில் சங்கு வளையல், கால்களில் முத்துச் சிலம்பு, அள்ளி முடிந்த அளகபாரத்தில் இரண்டொரு மயில் கண்களைத் தோகையிலிருந்து பிரித்துச் செருகியிருந்தாள்.

அவர்களைக் கண்டதும் தோகையை விரித்துக்கொண்டு எழுந்திருக்கும் இளமயில் போல் பாதங்களில் சிலம்பு ஒலிக்க எழுந்து நின்று அவள் வரவேற்றாள். அடடா! அப்போது அந்தப்